logo
மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

18/Mar/2021 10:40:52

ஈரோடு மார்ச்: மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக கூட்டணி கட்சியான பாஜக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் டாக்டர் சி.கே.சரஸ்வதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுக கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜ., கட்சியின் சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி போட்டியிடுகிறார். இந்நிலையில்  வியாழக்கிழமை மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக மொடக்குறிச்சியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ., சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவர் கணபதி, துணைத்தலைவர் மயில் (எ) சுப்பிரமணி, பாஜ., கட்சியின் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம், மாநில ஓபிசி., அணி துணைத் தலைவர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பணிமனையில் நடைபெற்றது. இதில் அகில பாரத இளைஞரணி தலைவரும், பெங்களூர் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஷ்வி சூர்யா கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஜாதி, மத வெறி, கலவரம் போன்ற எதுவும் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்த நல்லாட்சி தொடர ஆதரவளிக்க வேண்டும் என பேசினார்.

Top