logo
சட்டப்பேரவையில் அதிக கேள்விகளால் அதிமுகவை திணறவைத்தவன் நான்: சிவ.வீ.மெய்யநாதன் பேச்சு.

சட்டப்பேரவையில் அதிக கேள்விகளால் அதிமுகவை திணறவைத்தவன் நான்: சிவ.வீ.மெய்யநாதன் பேச்சு.

18/Mar/2021 08:27:11

புதுக்கோட்டை: எதிர்கட்சி உறுப்பினராக இருந்தாலும், சட்டப்பேரவையில் அதிக கேள்விகளால் அதிமுகவை திணறவைத்தவன் நான் என்றார் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன்.

  ஆலங்குடியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கமணி தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச்செயலாளர் ஞான.இளங்கோவன், கீரமங்கலம் நகரச்செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது: நான் எதிர்கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும், தொகுதியின் தேவைகளை போராடி பெற்றுத் தந்துள்ளேன். ஆலங்குடியில் மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம், உரிமையியல் நீதிமன்றம், வம்பனில் டிப்ளமோ விவசாய கல்லூரி, கோவிலூரில் உதவி மின் பொறியாளர் அலுவலகம், வல்லவாரியில் துணை மின் நிலையம், கீரமங்கலத்தில் புதிய துணை மின் நிலையம், தொகுதிக்குபட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு 25 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 கோடி மதிப்பில் குடிதண்ணீர் வசதி, சமுதாய கூடம் அமைத்துக்கொடுத்துள்ளேன். மேலும், 500 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90க்கும் மேற்பட்ட புதிய ஆழ்குழாய் கிணறுகள், 200க்கும் மேற்பட்ட டிரான்பார்மர்கள் அமைத்துக்கொடுத்துள்ளேன். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட 65 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளேன். மேலும், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி வந்து உதவியுள்ளேன். நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தேன். இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்ததன் விளைவாக அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது


கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தது. அப்போது, திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு 7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளபடி செய்தது. அதேபோல், மத்திய அரசும் 72 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தது. பாஜக, அதிமுக கூட்டணி தமிழக மக்களை வஞ்சிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் திருத்தச் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளையும், பொதுமக்களையும் நசுக்குகிறது. மேலும், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு, வேலை இல்லா திண்டாடத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

  கூட்டத்தில், திருமயம் தொகுதி வேட்பாளர் ரகுபதி, காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மாதவன், மதிமுக ஒன்றியச் செயலாளர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் வடிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.

Top