logo
தனியார் மயமாக்கலைக் கண்டித்து வங்கிகள் வேலைநிறுத்தம்: ஈரோடு மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட 217 வங்கிகள்  முடங்கின

தனியார் மயமாக்கலைக் கண்டித்து வங்கிகள் வேலைநிறுத்தம்: ஈரோடு மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட 217 வங்கிகள் முடங்கின

15/Mar/2021 06:33:59

ஈரோடு, மார்ச்: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கிகள் வேலைநிறுத்தம்- ஈரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட 217 வங்கிகளில் 2 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பு, பண பரிவர்த்தனை முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்

 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஐ.டி.பி.ஐ யை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்தும்  மார்ச் 15, 16 ஆகிய  இரண்டு நாட்கள் வங்கிகள் அகில  இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தன. 

அதன்படி, .ஈரோடு மாவட்டத்தில்   வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது  இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 217 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளையைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் பல கோடி  பணம் பரிவர்த்தனை  முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  வங்கிகள் முன்பு வேலைநிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதே சமயம் தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்கின.

இதுகுறித்து, அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி  கூறியதாவது:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றும், தற்போது இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் தனியார் மயமாக்கப் பட்டால் கிடைக்காது. 

தனியார் மயமாக்கப்பட்டால்.  மத்திய அரசின் சாலை வசதி, மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட கட்டுமானம் போன்ற அடிப்படை வசதிகளுக்கான மூலதனங்கள் பெரும்பாலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து வழங்கப்படும் நடைமுறை முழுவதுமாக  நிறுத்தப்பட்டு மக்கள் திட்டங்கள் நிறைவேறாத நிலை ஏற்படும்.


 தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. சேவை அடிப்படையில் செயல்படும் வங்கிகளின் தன்மை மாறி முழுமையாக கட்டண வங்கிகளாக செயல்படும். மக்களும், பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும் பெருமளவு பாதிக்கப்படுவர்.

இதனால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி  இரண்டு நாட்கள் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 217 வங்கி கிளைகளின் பணியாற்றும் 2ஆயிரம் ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளதாகவும் அவர் கூறினார். 


Top