logo
ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக களமிரங்கும்  முன்னாள் அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக களமிரங்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி

12/Mar/2021 08:55:00

ஈரோடு, மார்ச்: ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

 ஈரோடு பெரியார் நகரில் வசித்து வரும் முத்துசாமி(72). வெள்ளாளக்கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். எம்.ஏ.படித்துள்ளார். மனைவி ஜெயலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். மகன் ராஜா சென்னையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 1972-ஆம் ஆண்டு அதிமுவில் உறுப்பினராக சேர்ந்த முத்துசாமி 1977-ஆம் ஆண்டு முதன் முதலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதை தொடர்ந்து 1980, 1984 ஆகிய இரண்டு  முறை ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சரானார். இதையடுத்து 1991-இல் பவானி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார்.

இதுவரை 4 முறை எம்எல்ஏ-வாக இருந்துள்ளார். இதில் 3 முறை அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணி, ஜெ. அணி என்று இரண்டாக பிரிந்த போது முத்துசாமி ஜானகி அணியில் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தார். ஜானகி மறைவுக்கு பிறகு ஜெ. அணியில் இணைந்து அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்தார்.

 பின்னர் துணை பொதுச்செயலாளர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த சில நாட்களிலேயே கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் ஈரோடு மாவட்ட திமுக இரண்டாக பிரிக்கப்பட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், பின்னர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியிலும், 2016-ஆம் ஆண்டு  ஈரோடு மேற்கு தொகுதியிலும் வேட்பாளராக போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் மீண்டும் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக சு.முத்துசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்

Top