logo
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும்பிய மம்தா மீது தாக்குதல்: தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும்பிய மம்தா மீது தாக்குதல்: தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

12/Mar/2021 08:44:40


வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும்பிய மேற்குவங்க முதல்வர் மம்தா மீது தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்குமாறு அம்மாநில தலைமை செயலாளருக்கு தலைமை தேர்தல் ஆணையம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்குவங்க மாநில சட்டப் பேரவை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி  ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி (68), நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசில்  இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும் அதேதொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார். ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு,  மாலையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வந்தார். அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்த போது, அவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காலில்  காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் மீட்டு கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முன்னதாக மம்தா பானர்ஜி கூறுகையில், நான் காரின் கதவு அருகே நின்றிருந்தேன். அப்போது, 4, 5 பேர் என்னை தள்ளிவிட்டு தாக்கினர்.  என்னை சூழ்ந்து கொண்டு கார் கதவு நோக்கி தள்ளிவிட்டனர். கதவில் எனது கால் மோதியது. இதில் காலில் காயம் ஏற்பட்டது’ என்றார். 

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது (மம்தா பானர்ஜி) இடது கணுக்கால், கால் மற்றும் காயங்கள், வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட  கடுமையான எலும்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் 48 மணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் மம்தா தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த  தாக்குதல் சம்பத்துக்கு இடையே, மேற்குவங்க காவல்துறை இயக்குநர் வீரேந்தர் நீக்கப்பட்டு, நேற்று நிராஜ்நயன் என்ற ஐபிஎஸ் அதிகாரி புதிய காவல்துறைத் தலைவராக பொறுப்பேற்றார்.


இதற்கிடையே, இசட் - பிளஸ் பாதுகாப்பு கொண்ட  முதல்வர் மம்தா மீது எப்படி தாக்குதல் நடந்தது என்பது குறித்த அறிக்கையை மாநில தலைமை செயலாளர் சமர்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மம்தாவின் உறவினரான எம்பி அபிஷேக் பானர்ஜி இன்று அதிகாலை வெளியிட்ட தனது டுவிட்டரில், மே 2-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வங்காள மக்களின் சக்தியை காண உங்களை நீங்களே (பாஜக) தயார்படுத்திக்  கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல்வர் மீதான தாக்குதல் சம்பவம், அம்மாநில தேர்தலை புதிய திசையை நோக்கி கொண்டு செல்வதாக அரசியல் விமர்சகர்கள்  கூறுகின்றனர்.

கோபேக் கவர்னர்முதல்வர் மம்தா மீது தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர், மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசினார்.  பின்னர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மம்தாவை நேற்றிரவு தங்கர் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் அரை மணி நேரம் பேசிவிட்டு திரும்பினார்.

அதன்பின் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,  ‘முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படியும், அவர் உடல்நலம் குறித்து அறிக்கையை தரும்படியும் மாநில சுகாதார செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஆளுநர் மருத்துவமனைக்கு வந்து  செல்லும் இடைபட்ட நேரத்தில், அவருக்கு எதிராக ‘கோபேக்’ கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Top