logo
கோட்டை கஸ்தூரிஅரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

கோட்டை கஸ்தூரிஅரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

26/Sep/2020 12:40:16

news by p.raj..   ஈரோடு  கோட்டை பெருமாள் என்றழைக்கப்படும் அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.  புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள்.குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். இதைப்போல் ஏழரை சனி உள்ளவர்கள் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் வழிபட்டால் மிகவும் விசேஷம். அதன்படி இன்று புரட்டாசி மாதத்தின் 2-ஆம்  சனிக்கிழமை. இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு யாகசாலை நடந்தது. இதன் பின்னர், கோட்டை பெருமாளுக்கு(கஸ்தூரி அரங்கநாதர்) சந்தனம், பன்னீர் மூலிகை உள்பட 16 வகையான திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. மேலும் தங்க கவச அலங்காரத்தில் கோட்டை பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். முன்னதாக கோவில் நுழைவாயில் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு கைகளில்  கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. பக்தர்களின் உடல்  வெப்பநிலையை கண்டறியும் வகையில் வெப்ப மானி (தெர்மல்ஸ்கேன்) மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எப்போதும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.  இதைப்போல் அக்ரஹாரம் வீதியிலுள்ள ஐயர் பெருமாள் கோயில், கே.எஸ் நகர் பகுதியில் உள்ள பெருமாள் கோயில், வீரப்பன்சத்திரம்,  கருங்கல்பாளையம் போன்ற பகுதில் உள்ள பெருமாள் கோயிலிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 


Top