logo
தலித் இளைஞரை செருப்பால் அடித்த தொழிலதிபரை கைது செய்ய வேண்டும: சிபிஎம் வலியுறுத்தல்

தலித் இளைஞரை செருப்பால் அடித்த தொழிலதிபரை கைது செய்ய வேண்டும: சிபிஎம் வலியுறுத்தல்

05/Jan/2021 08:20:27

புதுக்கோட்டை, டிச: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தலித் இளைஞரை செருப்பால் அடித்து கொடுமைப்படுத்திய தொழிலதிபரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்துள்ள குளந்திரான்பட்டு  கிராமத்தில் தேசிய ஊரக வேவை உறுதித் திட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி அன்று வேலை நடந்துகொண்டிருந்தது. இப்பணிகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த தொழிலதிபர் கரிகாலனும் அங்கு இருந்துள்ளார். இந்நிலையில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தலித் இளைஞர் சிவக்குமாரை தொழிலதிபர் கரிகாலன் குறிப்பிட்ட வேலையை செய்ய வலியுறுத்திழாராம். தான் அறிவுறுத்திய வேலையை ஒழுங்காக செய்யவில்லை என மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் சாதியை சொல்லி திட்டியதோடு தன் காலில் கிடந்த செருப்பை கழற்றி சிவக்குமாரை கரிகாலன் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து, கறம்பக்குடி காவல்நிலையத்தில் சிவக்குமார்  அளித்த புகாரை பதிவு செய்யாமல் அலைக்கழித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தொடர்சியாக வலியுறுத்தியதை அடுத்து கடந்த சனிக்கிழமையன்று கரிகாலன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் சிவக்குமாரை மிரட்டி சமாதானமாகப் போவதாக காவல்துறையினரே எழுதி வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக வழக்கை நீர்த்த்துப் போகச் செய்யும் காவல்துறையின் நடவடிக்கை மிகுந்த கண்டனத்துக்குறியது.

எனவே, இந்த வழக்கில் காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்து செய்வதைக் கைவிட்டு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலித் இளைஞரை செருப்பால் அடித்த தொழிலதிபர் கரிகாலன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் சிவக்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கும்.

Top