logo
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பெற்றோர்களுடன் மாணவர்கள் தர்னா

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பெற்றோர்களுடன் மாணவர்கள் தர்னா

07/Dec/2020 04:59:23

ஈரோடு, டிச: கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக்கண்டித்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி  மாணவர்கள், பெற்றோர்கள் திங்கள்கிழமை  தர்னா போராட்டத்தில்  ஈடுபட்டனர்.


 ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி சாலைப் போக்குவரத்துக்கழகத்தின்  மருத்துவ கல்லூரியாக  செயல்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புஇந்த மருத்துவ கல்லூரி அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்டது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்தது. அதேநேரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு கட்டணமாக ரூ 13 ஆயிரத்து 610 வசூல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் பெருந்துறை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகும் தொடர்ந்து மாணவர்களிடம் தனியார் கல்லூரியில் வசூலிப்பது  போல் ரூ 3 லட்சத்து 85 ஆயிரம்  கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்தக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பெற்றோர்களும் மாணவரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று(டிச.7) மீண்டும் மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டது. அப்போது பெற்றோர்களுடன்  கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் திடீரென கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் கட்டணத்தை கண்டித்து பெற்றோர்களுடன் மாணவ மாணவிகள்  சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் பெருந்துறை டி.எஸ்.பி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கல்லூரி நிர்வாகத்துடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தினர். தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.


Top