logo
தரமற்ற முறையில் காந்தி சிலை பீடம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி. கைது

தரமற்ற முறையில் காந்தி சிலை பீடம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி. கைது

20/Feb/2021 07:33:18

கரூர், பிப்: கரூரில்  தரமற்ற முறையில் காந்தி உருவச்சிலைக்கு பீடம் அமைத்திருப்பதைக் கண்டித்து  திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட  கரூர் எம்.பி. ஜோதிமணி  போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருந்தது. 60 ஆண்டுகளுக்கு முன் அந்த சிலை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ரவுண்டானாவில் மாற்றம் செய்து புதிய காந்தி சிலை அமைப் பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கரூரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிதாக அமைக்கப்பட்டுள்ள காந்தி உருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் மார்பளவு காந்தி சிலை அகற்றப்பட் டிருந்ததை அறிந்து காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்ததுடன், கரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நகராட்சி நிர்வாகம் தாங்கள் எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை. நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்தும் எந்தவித அறிவிப்பு, ஒப்பந்தம், பணியாணை இல்லாமல் எவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக்கூறி  காங்கிரஸ் மாவட்ட தலைவர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், கரூர் வடக்கு நகர தலைவர் ஸ்டீபன்பாபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் உள்ளிட்ட காங்கிரசார் மற்றும் திமுகவினர் கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் திரண்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில்  சனிக்கிழமை  காலை லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த காந்தியின் மார்பளவு சிலை அகற்றப்பட்டு, காந்தி நிற்பது போன்ற முழு உருவச்சிலை பீடத்துடன் அமைக்கப்பட்டு இருந்தது. இதையறிந்த கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சம்பவ இடத்திற்கு சென்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் நாளை(பிப்.21) திறந்து வைப்பதற்காக காந்தி சிலை பீடம் தரமற்ற முறையில் அவசர கதியில் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே தரமான முறையில் பீடத்துடன் காந்தி சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுத்து ஜோதிமணி எம்.பி., காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி., மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி., உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர். பின்னர் அனைவரையும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Top