logo
புள்ளாச்சிகுடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட அடிக்கல் நாட்டு விழா

புள்ளாச்சிகுடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட அடிக்கல் நாட்டு விழா

19/Feb/2021 04:18:25

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

புள்ளாச்சிகுடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியைச் சுற்றிலும் 2 பக்கமும் சாலையும், 2 பக்கம் புதர்ச்செடியுமாக உள்ளன. சாலையோர பகுதிக்கு சுற்றுச்சுவர் இருந்தாலும் ஏனைய 2 பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதற்கிடையில், கஜா புயலின்போது மரம் விழுந்ததினால் குறிப்பிட்ட பகுதிக்கு சுற்றுச்சுவர் இடிந்துவிட்டது.

இதையடுத்து, இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தருமாறு தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.5 லட்சத்து 61 ஆயிரத்துக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

இதில், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ டி.புஷ்பராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் வளர்மதி, ஊராட்சி செயலாளர் மணிமாறன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




Top