logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.7.56 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.7.56 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

19/Feb/2021 08:44:08

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், கந்தர்வகோட்டை தொகுதிகளில்  ரூ.7.56 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து முன்னிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர்  கூறியதாவது:மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை  தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில்  திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அம்மன்குறிச்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், மேலசிவபுரியில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம், கருப்பக்குடிப்பட்டியில் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் ஆகிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் நல்லூரில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, புறக்கரைப்பட்டி யில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொடக்கப்பள்ளியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதேபோன்று கந்தர்வக்கோட்டையில் ரூ.2.72 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

 அம்மன்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் செயல்படும். 

இதேபோன்று புதிதாக திறக்கப்பட்டுள்ள பள்ளி கட்டடங்கள் மூலம் போதிய இடவசதியுடன் மாணவ, மாணவியா; சிறந்த முறையில் கல்வி கற்க முடியும். மேலும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட பள்ளிகளால் இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவியா; தங்களது பகுதிகளிலேயே கல்வி கற்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளில் 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறி யுள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் ஆர். பழனியாண்டி, பொது சுகாதாரத் துணை இயக்குநர் பா. கலைவாணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள்  பலர்  கலந்து கொண்டனர்.  

Top