logo
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன்: ராகுல் காந்தி

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன்: ராகுல் காந்தி

18/Feb/2021 10:43:44

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பிரசாரத்துக்காக புதுச்சேரிக்கு புதன்கிழமை பிற்பகலில் ராகுல் காந்தி வந்தார்.

கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல்: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடலில் ராகுல் காந்தி பேசியது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை. அப்பாவை இழந்தது மிக கடினமான தருணம். இதயமே  வெடித்தது போன்ற உணர்வு அப்போது இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன்.

வன்முறை மூலம் நம்மிடம் இருந்து எதையும் எடுத்துவிட முடியாது.எனது தந்தை ராஜீவ் காந்தி இப்போதும் என் மனதில் வாழுகிறார். அவர் இறந்ததாக நான் நினைக்கவில்லை. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்துத் துறைகளிலும் 50 சதவீதம் என்பதைவிட 60 சதவீதம் வழங்குவது அவசியம். நாட்டிலுள்ள பல்வேறு கலாசாரங்கள், மொழிகளை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.

தமிழ் கலாசாரத்தை மதிக்கிறேன். மொழி, கலாசாரம் என எதையும் திணிக்கமாட்டேன். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற சிந்தனையை சமுதாயத்தில் உருவாக்கும் போதுதான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்  என்றார் ராகுல் காந்தி.

இந்தக் கூட்டங்களில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஷாஜகான், மு.கந்தசாமி  கமலக்கண்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top