logo
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விடுத்த கோரிக்கையை 24 மணி நேரத்தில்  நிறைவேற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விடுத்த கோரிக்கையை 24 மணி நேரத்தில் நிறைவேற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

16/Feb/2021 04:24:55

புதுக்கோட்டை, பிப்:  புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திற்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின்  பிரசாரத்திற்காக வந்த திமுக தலைவர் மு .க .ஸ்டாலினிடம், ஆலங்குடி அருகேயுள்ள மாங்கனாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ்- அமுதா தம்பதியினர் தனது குழந்தைக்கு சிகிச்சைக்காக உதவுமாறு அளித்த மனுவுக்கு 24 மணி நேரத்தில்  ஆலங்குடி எம்எல்ஏ- மூலம் நிவாரண உதவி அளிக்க நடவடிக்கை எடுத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட மாங்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்- அமுதா தம்பதியினர் . இவர்களது மகள் ரக்க்ஷிதா . இரண்டு வயது பெண் குழந்தையான இவருக்கு வினோதமான நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது . கண் திறந்த நிலையிலேயே இருக்கும் கண்ணை மூட முடியாது குழந்தை உணர்வில் தூங்கினாலும் கண்கள் திறந்தபடியே இருக்கும்.

மேலும் கண்கள் நிறம் மாறி வெள்ளையாக நிறம் மாறிவிடும். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று காண்பித்தனர். அப்போது குழந்தைக்கு தொடர்ந்து நாளொன்றுக்கு பத்து முறை மருந்து போட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். 

இதேபோல் 10 வயது வரை நாள்தோறும் மருந்து போடவேண்டும் என்று கூறியுள்ளனர். கூலி வேலை செய்து பிழைக்கும் செல்வராஜ்- அமுதா தம்பதியினருக்கு கண்ணுக்கு தேவையான மருந்து வாங்க போதிய  பொருளாதார வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் திங்கள்கிழமை நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின்  என்ற மக்கள் சந்திப்பு- கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சிக்காக வந்த திமுக தலைவர் மு .க .ஸ்டாலினிடம் செல்வராஜ்- அமுதா தம்பதியினர் தனது குழந்தைக்கு சிகிச்சைக்காக உதவுமாறு மனு கொடுத்தனர் .

மனுவை படித்த மு.க .ஸ்டாலின் உடனடியாக இந்த குழந்தையின் வீட்டிற்கு சென்று பார்த்து தேவையான உதவிகளை செய்யுமாறு ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ-சிவ.வீ. மெய்யநாதனுக்கு உத்தரவிட்டார் . 

இதனை தொடர்ந்து மாங்கனாம்பட்டியில் உள்ள அந்த குழந்தையின் வீட்டிற்கு சென்ற எம்எல்ஏ மெய்யநாதன் குழந்தையின் மருந்து செலவிற்காக தனது சொந்தப் பொறுப்பில்  ரூ. 2 லட்சம்  நிதியுதவி வழங்கினார் .

இந்நிகழ்வின்போது எம்எல்ஏ மெய்யநாதன் மு.க . ஸ்டாலினுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது ஸ்டாலின் போன் மூலம் குழந்தையின் தாய் அமுதாவுக்கு   ஆறுதல் தெரிவித்த அவர்  தைரியமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

Top