logo
தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை: பிப்.22 -இல் தாக்கல்...?

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை: பிப்.22 -இல் தாக்கல்...?

14/Feb/2021 08:30:50

சென்னை: தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை  சட்டப்பேரவையில்  வருகிற 22-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தடவை தேர்தல் நடப்பதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இடைக்கால நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. அதில் சில புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு  தமிழக அமைச்சரவை  சனிக்கிழமை  ஒப்புதல் வழங்கியது. புதிய செலவுகள், வரவுகள் தொடர்பான முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த பட்ஜெட் முழுமையான நிதிநிலை அறிக்கையாக இருக்கலாம் எனவும்  கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெற இருப்பதால் பொதுமக்களை கவரும் வகையில் சில புதிய திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில்  அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போதைய நிதிநிலை அறிக்கை இடைக்கால நிதிநிலை அறிக்கையாக  இல்லாமல் முழுமையானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் வருகிற 22-ஆம் தேதி இந்த நிதிநிலை  அறிக்கை  தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நேர நிதிநிலை அறிக்கை  என்பதால் புதிய இலவச அறிவிப்புகள் இடம்பெற கூடும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டம் கடந்த ஓராண்டாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. புதிய வடிவில் இந்த திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ஏழைகளுக்கு பட்டா வழங்குவது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

இதைதவிர தொழில்துறையை ஊக்குவிப்பது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியாகும். மேலும், பெண் வாக்காளர்களை கவரும் வகையிலும் புதிய திட்டங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

Top