logo
 நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்: பிரதமர் மோடி பாராட்டு

நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்: பிரதமர் மோடி பாராட்டு

14/Feb/2021 07:25:23

சென்னை: நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர், அவர்களைப் பாராட்டுவதாகவும்  பிரதமர் மோடி பேசினார்.

 சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் 8000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி,  வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று தமிழில் உரையை தொடங்கினார். அவர் மேலும் பேசியதாவது: இனிய வரவேற்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி. சென்னைக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  முக்கியமான கட்டமைப்பு திட்டங்களை சென்னையிலிருந்து  தொடங்கியுள்ளோம். தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும்.  636 கிலோமீட்டர் தூரம் கல்லணையை புதுப்பிக்க இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டுகள். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டினார்.

 

அதேபோல் ஆயுதங்களின் முக்கியத்துவத்தை  ஆயுதம் செய்வோம்... நல்ல காகிதம் செய்வோம் என்ற பாரதியின் பாடலையும் மேற்கொள் காட்டினார். 


தில்லியில் இருந்து விமானத்தில் ஞாயிறு காலை சென்னை வந்து சேர்ந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என். எஸ் கடற்படைத் தளத்துக்கு சென்று அங்கிருந்து விழா நடக்கும் நேரு உள் விளையாட்டரங்கிற்கு காரில் வந்தார். விழா மேடைக்கு வருவதற்கு முன்பாக பிரதமர் மோடி அர்ஜுன் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார்.


 மேடைக்கு வந்த பிரதமர் மோடி,  அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்  எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை சால்வை அணிவித்து வரவேற்றார். அதேபோல் கிருஷ்ணர் சிலை ஒன்றையும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவு பரிசாக அளித்தார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர்  வரவேற்புரையாற்றினார். 


அதன்பின், பிரதமர் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 3,370 கோடியில் முடிந்த மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையை தொடங்கி வைத்தார். சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-ஆவது ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 293.40 கோடியில் 22.1 கிலோமீட்டர் தொலைவுக்கு  ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை சென்னை துறைமுகம் எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய தளங்கள் வழியாக செல்லும்.

 

அதேபோல் கல்லணை வாய்க்காலை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ 2,640 கோடியில் வாய்க்காலை நவீனப்படுத்துவதன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லும் திறன் மேம்படும். விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுறை-தஞ்சை பிரிவுகளில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ரயில் எரிபொருளுக்கான செலவில் நாளொன்றுக்கு 14 கோடியே 60 லட்சம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  


Top