logo
சசிகலாவைத் தவிர்த்து தினகரனை மட்டும் விமரிசிப்பது  பற்றி  முதல்வர் விளக்கம்

சசிகலாவைத் தவிர்த்து தினகரனை மட்டும் விமரிசிப்பது பற்றி முதல்வர் விளக்கம்

11/Feb/2021 09:51:22

அதிமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சித்ததால்தான்  டிடிவி தினகரனைப் பற்றி மட்டுமே பேசுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.


முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின்  பல்வேறு கேள்விகளுக்கு  பதிலளித்து முதல்வர் பேசியது:

எஸ்.பி. வேலுமணி கட்சிக்குள் இருக்கும் பிரச்னையையே அண்ணன் தம்பி பிரச்னை என்று குறிப்பிட்டார். அந்த செய்தி தவறாக பரப்பப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்.

சசிகலாவின் சொத்துகள் அரசுடமை ஆக்கப்படுவதற்கும், அரசுக்கும் தொடர்பில்லை. நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாமகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. இடஒதுக்கீடு அளிப்பது பற்றி சூழலுக்கேற்ப முடிவெடுக்கப்படும். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா அரசு தொடரும். 

அதிமுக வேறு, அமமுக வேறு. அமமுக என்ன முயற்சித்தாலும் ஒன்றும் நடக்காது. அக்கட்சியிலிருந்து விலகி யாரேனும் அதிமுகவில் சேர விரும்பினால் கட்சி முடிவு செய்யும். அதிமுகவைப் பொறுத்தவரை திமுகதான் எதிரி கட்சி. 

தினகரன்தான் 18 எம்எல்ஏ-க்களைப் பிரித்து, கட்சியை உடைத்து ஆட்சியைக் கலைக்க முயற்சித்தார். அதன்பிறகு அமமுக கட்சியைத் தொடங்கினார். அதனால்தான் தினகரனைப் பற்றியே பேசுகிறோம்.

அதிமுகவில் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம். எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள், முதல்வர் மீதான ஊழல் வழக்குகளை தனி நீதிமன்றம் விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஸ்டாலின் அறியாமையில் பேசுகிறார். திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீதான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எதையும் சந்திக்கத் தயார்


Top