10/Feb/2021 01:04:44
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் முன்னிலையில் (பிப்.9) நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்;ஆகியோர் கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதல்வரால் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு ஏற்கெனவே கோவிட் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்பொழுது காவல்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சார்ந்த முக்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
பிப்.8 வரை வரை தமிழகத்தில் 1,74,749 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சராசரியாக தினமும் 8,000 முதல் 10,000 நபர்கள் கோவிட் தடுப்பூசியினை போட்டுக்கொள்கின்றனர்.இதே போன்று பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்தவகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சார்ந்த முன்களப்பணியாளர்கள் கோவிட் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து நம்பிக்கையூட்டும் வகையில் கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டது மிகவும் பாராட்டுக்குரியது.
தமிழகத்திற்கு இதுவரை 12,34,000 எண்ணிக்கையில் கொரோனா தடுப்பு மருந்துகள் வரப்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மருந்துகள் மத்திய அரசிடமிருந்து வர உள்ளது. சுகாதாரத்துறை முன்களப் பணியாளர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. எனவே சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் விடுபடாமல் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழக மக்களுக்கு தடுப்பூசி குறித்த போதுமான விழிப்புணர்வு உள்ள காரணத்தினால் மட்டுமே இதுவரை 1,74,749 நபர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களுக்கு இயற்கையாகவே புதிதாக தடுப்பூசி வரும் போது சிறிது தயக்கம் இருப்பது உண்மைதான். இந்தக் காரணத்தினால் தான் சுகாதாரத்துறையின் சார்பில் நான் தடுப்ரூசி எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளோ, பக்க விளைவுகளோ ஏற்படவில்லை.
எனவே பொது மக்கள் அனைவரும் எந்தவிதமான தயக்கமோ, பயமோ இன்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.