logo
9, 11-ஆம்  வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ,மாணவிகள்

9, 11-ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ,மாணவிகள்

08/Feb/2021 06:32:19

ஈரோடு, பிப்:  தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததையொட்டி பள்ளிகள் திறப்பது குறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர், கல்வியாளர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. 


இதன்பேரில், முதற்கட்டமாக நடப்பு கல்வி ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் பள்ளிகளில் திங்கள்கிழமை(8.2.2021) முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு கடந்த 31-ஆம் தேதி அறிவித்தது. 


 ஈரோடு மாவட்டத்தில் உள்ள 403 பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு  வந்தன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 9, 11-ஆம் வகுப்புகள்  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் என 403 பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் 14,631 மாணவர்களும், 13,762 மாணவிகள் என மொத்தம் 28,393 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். பிளஸ் 1 வகுப்பில் 11,957 மாணவர்களும், 12,916 மாணவிகள் என மொத்தம் 24,873 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 9, 11ம் வகுப்பு மாணவ-மாணவிகள் என மொத்தம் 53,266பேரும் படித்து வருகின்றனர்.


திங்கள்கிழமை காலை 8 மணிக்கு மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உடன் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர்.நீண்ட நாட்கள் கழித்து உடன் படிக்கும் நண்பர்களைச் சந்தித்த  மாணவர்கள் மகிழ்ச்சி திளைத்தனர்.அனைவருக்கும்  பள்ளிகளின் வளாகத்திலேயே கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். ஒரு சில மாணவ மாணவிகள் முக கவசம் அணிந்து வரவில்லை. அவர்களுக்கு பள்ளிகள் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.


ஒரு வகுப்பில் 25 மாணவ,மாணவிகளை மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.  பள்ளிக்கு வந்த அனைத்து மாணவ மாணவிகள் பெற்றோர்களிடம் ஒப்புதல் அனுமதி கடிதம் பெற்று வந்தனர். மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பள்ளி வளாகத்தில் அறிவிப்பு பலகையில் துண்டறிக்கை  ஒட்டப்பட்டிருந்தது. அதில் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது, முக கவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்ளக் கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியிருந்தன.

 

இதைப்போன்று வெளி மாவட்டங்களில் இருந்து வந்த மாணவ மாணவிகளுக்காக விடுதிகளும் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. இதைப்போன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவ,மாணவிகளுக்கும்  வகுப்புகள் தொடங்கியது. கல்லூரிகளிலும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்கள் சோதனை செய்யப்பட்ட பின்னரே  வகுப்பு அறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சில கல்லூரிகளில் முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவ மாணவிகளை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

Top