logo
நூலகச் செயல்பாட்டை இயல்புநிலைக்கு கொண்டு வர  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமுஎகச வலியுறுத்தல்

நூலகச் செயல்பாட்டை இயல்புநிலைக்கு கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமுஎகச வலியுறுத்தல்

04/Feb/2021 08:25:02

புதுக்கோட்டை,பிப்:  புதுக்கோட்டையில் நடைபெற்ற தமுஎகச மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில்  இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றவர்களை தமிழக அமைச்சரவையின் முடிவு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல் அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும். 

அரசியல் காரணங்களுக்காக நாடெங்குமுள்ள சிறைகளில் விசாரணையின்றி  ஆண்டுக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி போராடிவரும் விவசாயிகளுக்கு தனது ஒருமைப்பாட்டை  தெரிவித்துக்கொள்ளும் தமுஎகச செயற்குழு, அச்சட்டங்களை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. 

பீமா கோரேகான் வழக்கில் இட்டுக்கட்டி சேர்க்கப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா.அவை மனிதவுரிமைப் பிரிவு உள்ளிட்ட  அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை இந்திய ஒன்றிய அரசு உதாசீனப்படுத்துவதை ஏற்கமுடியாது. இவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். 

பொதுமுடக்கத் தளர்வு பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுவரும் நிலையில் பொது நூலகங்கள் இன்னமும் முழுமையாக செயல்படாமல் உள்ளன. நூலகச்செயல்பாட்டை இயல்பு நிலைக்குத் திருப்பிட தமிழக அரசு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு  மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.வேலை அறிக்கையை பொதுச்செயலர்  ஆதவன் தீட்சண்யா வாசித்தார்.வரவு செலவு அறிக்கை பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் சமர்ப்பித்தார்கௌரவத் தலைவர் சா.தமிழ்ச்செல்வன், துணைப் பொதுச்செயலாளர் கே.வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Top