logo
ஈரோடு ஆயுதப்படை உதவி ஆய்வாளர்  உள்பட 2 போலீசாருக்கு கொரோனா: 90 பேருக்கு பரிசோதனை

ஈரோடு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் உள்பட 2 போலீசாருக்கு கொரோனா: 90 பேருக்கு பரிசோதனை

30/Jan/2021 07:08:02

ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.முன் களப்பணியாளர்களான டாக்டர், செவிலியர்கள், போலீசார், அரசு உயர் அதிகாரிகள், வயதானவர்கள் குழந்தைகள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கி வந்தது. மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. 

சனிக்கிழமை  சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 325 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 3 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 

இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 982 ஆக உயர்ந்தது. இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 193  பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் போலீசாருக்கு மீண்டும் கொரோனா  பரவ தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் பாதுகாப்பு பணிக்காக சென்று வந்த ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தெற்கு போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் மற்ற போலீசாருக்கும் பரிசோதனை செய்யப்பட்டன. இதில், வெள்ளிக்கிழமை  தெற்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் உள்பட   மேலும் மூன்று போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் போலீஸார் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு சென்று வந்த போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர் மற்றொரு போலீசார் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

 இதையடுத்து ஆயுதப் படையில் பணியாற்றும் 90 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் இன்றும் 90 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் மீண்டும் வேகமெடுத்து இருப்பது போலீசார் இடையே  அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.


Top