logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 74 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் பாதிப்பு:  அமைச்சர்  சி.விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 74 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

19/Jan/2021 09:03:24

புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 50,000 ஏக்கர், அடுத்த கட்டமாக 24,000 ஏக்கர் உள்பட மொத்தம் 74,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.


புதுக்கோட்டை  அன்னவாசல் சாலையிலுள்ள கவிநாடு கண்மாயில் நீர் நிரம்பியுள்ளதை  மாவட்ட ஆட்சியர் பி. மகேஸ்வரியுடன் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக  நிரம்பியுள்ள தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான  கவிநாடு கண்மாயை  நேரில்  பார்வையிட்டோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெய்த சராசரி மழையளவை காட்டிலும் இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் மழை பாதிப்புகள் தொடர்பாக   முதல்வர்  தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில்   மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 1,166 பெரிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் கரைகளை பலப்படுத்துதல், மதகுகள் பராமரித்தல், நீர் கசிவை தடுத்தல் போன்ற  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர் வெளியேறாமல் தடுக்கும் வகையில் தேவையான மணல் மூட்டைகள் மற்றும் அதற்கு தேவையான சாக்கு பைகள் போன்றவற்றை தொடர்புடைய ஆயக்கட்டுதாரர்கள் இருப்பு வைத்துக் கொள்ள பொதுப்பணித்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நிலைமை முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

விவசாயிகளை பொறுத்து வரை தை மாதத்தில் மழையை எதிர்பார்க்கவில்லை. தை மாதத்தில் கதிர்முற்றி அறுக்கக் கூடிய அறுவடை காலத்தில் மழை பெய்ததால் கதிர் அறுக்க முடியாமல் வயல்களில் கதிர்கள் சாய்ந்து தொடர்மழையால் நெல் மணிகள் முளைத்துவிட்டது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து  தமிழக முதல்வர் தேவையான உத்தரவுகளை வழங்கியுள்ளார். இதன்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைதுறை அலுவலர் மூலம் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கும் வகையில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 50,000 ஏக்கரில் நெல் பாதிக்கப்பட்ட வயல்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கூடுதலாக 24,000 ஏக்கர் பாதிப்பு கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 74,000 ஏக்கர் நெற்பயிர் பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் மழை குறித்த வானிலை அறிவிப்புகள், களநிலவரம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவுத் திட்டம்      காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கான தொடக்க பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான டெண்டர் பணிகள் முடிவுற்றுள்ளது. திட்டமிட்டபடி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி   புதுக்கோட்டை மாவட்டத்திற்கு  விரைவில் வருகை தந்து காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தால் விவசாயிகள் அதிக பயனைப் பெறமுடியும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

Top