logo
ஈரோடு கொங்கலம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு கொங்கலம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

28/Jan/2021 06:11:11

ஈரோடு, ஜன: ஈரோடு கொங்கலம்மன் கோயில் தைப் பூசத்தையொட்டி நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

ஈரோடு கொங்கலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 19-ஆம் தேதி பூச்சாற்றப்பட்டு, 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 

தொடர்ந்து மாலையில் அம்மன் உள் பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 26-ஆம் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 8.45 மணிக்கு நடந்தது. தேரோட்டத்தை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., தென்னரசு, முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன், கோயில் செயல் அலுவலர் முத்துசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

 இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் கோயில் முன் துவங்கி, ஆர்கேவி ரோடு, மணிக்கூண்டு, பொன் வீதி வழியாக சென்று மதிய வேளையில்  தேர் மீண்டும் கோயில் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி மணிக்கூண்டு, ஆர்கேவி ரோடு, பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 

தேர் செல்லும் பகுதிகளில் மின்வாரியம் மூலம் சில மணி நேரம் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை (29-ம் தேதி) காலை 9 மணிக்கு விடாயாற்றி உற்சவம் மற்றும் மஞ்சள் நீராட்டும், காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு கோயிலில் தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.

 இதேபோல், திண்டல் வேலாயுதசாமி கோயிலில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முருகனை வழிபட்டு சென்றனர். ஈரோடு பெரியதோட்டம் விவேகானந்தா நகரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஓம் சக்திவேல் முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

Top