logo
பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும்: கொமதேக வலியுறுத்தல்

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும்: கொமதேக வலியுறுத்தல்

05/Dec/2020 06:09:36

சென்னை: இது குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற அனைத்து சாதிகளும் ஒன்றிணைந்து மொத்த ஜனத்தொகையாக 55 சதவீதம் இருக்கின்றார்கள். தமிழகத்தின் 55 சதவீத மக்களுக்கான இட ஒதுக்கீடாக 26.5 சதவீதம் வழங்கப்படுகிறது. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழகத்தில் அதிகமான பாதிப்பை சந்தித்து கொண்டிருப்பது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சாதிகளை சார்ந்தவர்கள் தான்.

 பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்ற சாதிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டிய சூழ்நிலை நெருங்கி கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க  வேண்டுமென்று போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்துதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதம் உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டது. இவ்வாறு கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீடுகளால் தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 26.5 சதவீதமாக இன்றைக்கு இருக்கிறது. 

55 சதவீத மக்களுக்கான 26.5 சதவீதமாக இருக்கின்ற இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக மாற்றினால்தான் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சாதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் ஓரளவுக்காவது வாய்ப்பு கிடைக்கும்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சாதிகள் ஒன்றிணைந்து களத்திற்கு வந்து போராடினால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை கிடைக்கும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக தான் இருக்கிறோம். அதனால் அரசு பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Top