logo
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா வாரிசு மக்கள் தான்: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா வாரிசு மக்கள் தான்: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

18/Dec/2020 08:37:47

சேலம், டிச: எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வாரிசு மக்கள் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டத்தில் ஏ. வாணியம்பாடி மற்றும் முத்துநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு இடங்களிலும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மினி கிளினிக்குகளை வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

இதையடுத்து முதல்வர்   எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: எம்.ஜி.ஆர், அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களின் வழியில் நடைபெறுகின்ற அரசு, அம்மாவின் அரசு. எம்.ஜி.ஆர் , ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோடியில் வாழ்கின்ற ஏழை, எளிய மக்களின் வாழ்வு ஏற்றம் பெற வேண்டும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய லட்சியம் என்று இந்த இயக்கத்தை உருவாக்கினார். அதில் வெற்றி கண்டார், முதலமைச்சரானார். 

அவர் வாழ்ந்த காலம் முழுவதும் பொற்காலம். ஏழைகளின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்று அண்ணா குறிப்பிட்டதை நிறைவேற்றிக் காட்டிய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். அதே வழியில் வந்த அம்மாவும், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி, அந்த இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்குவதற்கு லட்சியப் பாதையில் நடைபோட்டு, தான் உயிருடன் இருந்தவரை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினார்.

மக்கள் தான் வாரிசு:அந்த இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசுகள் கிடையாது. நாம் தான் வாரிசு, மக்கள் தான் வாரிசு. அவ்வாறு எண்ணித்தான் நல்ல பல திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்குத் தந்தார்.

ஒரு தாய், தன் குழந்தையின் தேவையை குறிப்பறிந்து செயல்படுவதைப் போல இருபெரும் தலைவர்களும் இந்நாட்டு மக்களை குழந்தைகளாக எண்ணி, அவர்களின் குறிப்பறிந்து, தேவையான திட்டங்களை எப்பொழுது செயல்படுத்த வேண்டுமென்று எண்ணி, அவைகளை செயல்படுத்தியும் காட்டினார்கள். 

அவர்கள் செயல்படுத்திய அத்தனை திட்டங்களும் உயிரோட்டமுள்ள திட்டங்கள். வேறு எந்தத் தலைவர்கள் வந்தாலும் அந்தத் திட்டங்களை நிறுத்த முடியாது. சரித்திர சாதனை படைத்த சத்துணவுத் திட்டத்தை தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கடைபிடித்தார்கள். அம்மா ஆலயங்களில் அன்னதானத் திட்டம் கொண்டு வந்து உணவு கொடுத்தார். பெண்களுக்கான திட்டங்களை குறிப்பறிந்து செயல்படுத்தினார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். அம்மா வழியில் நடைபெறும் அரசும் அம்மாவின் வழியை கடைபிடித்து வருகிறது.

அம்மாவின் திட்டம் நிறைவேற்றம்: அம்மா, நான் முதலமைச்சரானவுடன் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூபாய் 12 ஆயிரத்தை ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தி வழங்குவேன் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்ததை நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தில், நிதியுதவியாக ரூபாய் 25 ஆயிரம், ரூபாய் 50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தாலிக்குத் தங்கத்திற்கு பதில் 8 கிராம் (அதாவது 1 பவுன்) வழங்கப்படும் என 2016 தேர்தலில் அம்மா வாக்குறுதி கொடுத்தார். 

அம்மா மறைந்தாலும், நான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், 4 கிராம் தங்கத்தை 8 கிராம் தங்கமாக வழங்கினேன். அதேபோல், திருமண உதவித் தொகையாக ரூபாய் 25 ஆயிரம் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமென்பதற்காக அம்மாவின் அரசு ஏராளமான திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஏழைகளுக்கான அரசு: அம்மாவின் அரசு, தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க 2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்று அறிவித்தேன். முதற்கட்டமாக, கொண்டலாம்பட்டியிலும், இரண்டாவது லத்துவாடியிலும் இன்று, மூன்றாவதாக, பனமரத்துப்பட்டி, ஏ.வாணியம்பாடி பகுதியிலும் திறந்து வைத்துள்ளேன். 

முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மூலம் கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் அந்தந்தப் பகுதியிலேயே, அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடி தங்களுடைய நோயை குணப்படுத்திக் கொள்ளலாம். கடுமையான நோய் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு தங்கள் பகுதியிலுள்ள மினி கிளினிக் மருத்துவரை நாடினால், அவர் பரிசோதனை மேற்கொண்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு ஏழை, எளிய மக்களுக்காக திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகிற ஒரே அரசு, அம்மாவின் அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் இருக்கின்ற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவேரித் தண்ணீர் வழங்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக தொடர்ந்து வைத்து வந்த கோரிக்கையை அம்மாவின் அரசு விரைவில் நிறைவேற்றி, அந்தப் பகுதிகளிலுள்ள 4,63,500 மக்கள் நிரந்தரக் குடிநீர் பெறுவதற்கான வழிவகைகளை அம்மாவின் அரசு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேலத்திலிருந்து கோயம்புத்தூர் செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை அரியானூர் பெரிய ரோட்டில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கிராமத்திலிருந்து வருகின்றவர்கள் அந்தப் பாதையை கடக்கும்போது விபத்துக்குள்ளாகி உயிரிழக்கக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. அங்கே ஒரு மேம்பாலம் கட்ட வேண்டுமென்று மக்களிடத்திலிருந்தும், சட்டப்பேரவை உறுப்பினரிடத்திலிருந் தும் கோரிக்கை வந்தது. அந்தக் கோரிக்கையையும் நாங்கள் தான் நிறைவேற்றித் தந்திருக்கிறோம். சுமார் ரூபாய் 45 கோடி மதிப்பீட்டில் அப்பணி நிறைவு பெறும் தருவாயில் இருக்கின்றது. நிறைவு பெற்றவுடன் நானே நேரில் வந்து அந்தப் பாலத்தையும் துவக்கி வைப்பேன்.

அதுபோல பல்வேறு சாலைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியிருக்கின்றோம். என்றைக்கும் இல்லாத அளவிற்கு நகர்ப்புற சாலையிலிருந்து கிராமப்புற சாலை வரை மற்றும் நெடுஞ்சாலை பராமரிக்கப்படுகின்ற சாலை போன்ற பெரும்பாலான சாலைகளை சீர்செய்து தரமான சாலையாக எங்களுடைய அரசு மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரை, மக்களுடைய அரசு, மக்கள் என்ன எண்ணுகின்றார்களோ அதை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

Top