logo
14 வழக்குகளில் தொடர்புடைய  திருடன் ஈரோட்டில்  கைது:  திருடிய பணத்தில் வீடு மனை வாங்கியது விசாரணையில் அம்பலம்

14 வழக்குகளில் தொடர்புடைய திருடன் ஈரோட்டில் கைது: திருடிய பணத்தில் வீடு மனை வாங்கியது விசாரணையில் அம்பலம்

28/Jan/2021 05:32:49

ஈரோடு, ஜன: 14 வழக்குகளில் தொடர்புடைய  திருடனை அதிரடியாக ஈரோட்டில்  கைது போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  திருடிய பணத்தில் வீடு மனை வாங்கியது தெரிய வந்துள்ளது.

ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 49). இவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் துணி பதனிடும் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 13-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்றார். அங்கு பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 47 பவுன் நகை  திருடு போனது தெரிய வந்தது.. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதேபோல் ஈரோடு ஆசிரியர்காலனியில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23-ஆம் தேதி 16 பவுன் நகை கொள்ளை போனது. ஈரோடு மாநகர் பகுதியில் இந்த 2  திருட்டு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வழக்கில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு  தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ஜெயமுருகன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருட்டுபோன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியைத்தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஈரோடு சம்பத்நகர் பகுதியில் தனிப்படை போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், வடக்கு காந்திகிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற விக்னேஷ் (41) என்பதும், அவர்தான் செந்தில்குமார், ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் திருடியதும் தெரியவந்தது.

மேலும், விக்னேஷ் மீது கரூர் மாவட்டத்தில் 5 திருட்டு வழக்குகள், ஈரோட்டில் 4 திருட்டு வழக்குகள், சேலத்தில் 5 திருட்டு வழக்குகள் ஏற்கெனவே உள்ளன. திருட்டு வழக்கில் சிறை சென்றுவிட்டு கடந்த மாதம் 2-ஆம் தேதி வெளியே வந்த அவர் கரூரில் இருந்தால் மீண்டும் போலீசார் தன்னை தேடுவதாக நினைத்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கி வந்துள்ளார். அப்போது அவர் ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு பகலில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு, பிறகு இரவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

போலீசாரிடம்  திருட்டு சம்பவத்தை எப்படி செய்தது து குறித்து சுரேஷ் கூறியதாவது:

திருடிய நகைகளை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று பணம் பார்த்தேன். இன்னும் சில நகைகளை வங்கியில் அடமானம் வைப்பது போல் வைத்து பணத்தை வாங்கிக் கொள்வேன். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்தேன்.  கொடுமுடி ஒத்தக்கடை பகுதியில் திருடிய பணத்தின் மூலம் வீடு மனை பட்டா வாங்கி உள்ளேன். இந்நிலையில்தான் மோட்டார் சைக்கிளில் சென்றபோது போலீசார் வாகன சோதனையில் சிக்கி கொண்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க சி.சி.டி.வி கேமரா காட்சிகள் தான் முக்கிய தடயமாக இருந்தது. கிட்டத்தட்ட 50 -க்கும்  மேற்பட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை பிடித்துள்ளோம். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர்.

Top