logo
வாட்ஸ்ஆப் விதிமுறைகளை ஏற்காவிட்டால் செயலி அழிந்துவிடும்: பிப்.8 முதல் அமலாகிறது

வாட்ஸ்ஆப் விதிமுறைகளை ஏற்காவிட்டால் செயலி அழிந்துவிடும்: பிப்.8 முதல் அமலாகிறது

11/Jan/2021 10:48:34

வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கு பிப்.8 -இல் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளது. அவற்றுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே தொடர்ந்து செயலியை பயன்படுத்த முடியும், இல்லையென்றால் அது அழிந்துவிடும்.

வாட்ஸ்ஆப் விதிக்கும் விதிமுறைகளை ஏற்காவிட்டால், செயலியை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் என்றும், இது பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாட்ஸ்ஆப்-பில் வரும் தகவல்களை சாதாரணமாக நிராகரிக்காமல், நன்கு படித்துப் பார்த்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளராக நீடிக்க முடியும்.

காலத்துக்கு ஏற்ப பல்வேறு பல புதிய சேவைகளைப் பயன்பாட்டாளர்களுக்கு வாட்ஸ்ஆப் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. 

ஆனால் தற்போது புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல்களும், பயன்பாட்டாளர் களின் தரவுகளும் பாதுகாப்பானதல்ல என்று வெளியான செய்திகளால் உலகம் முழுவதும் இந்த செயலியைப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.  இதை வாட்ஸ்ஆப் நிறுவனம் மறுத்துள்ளது. 

ஆனாலும் இந்த விவகாரம் வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு பல்வேறு நாடுகளில் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது.

இந்நிலையில், பயன்பாட்டாளர்களுக்கு இதுதொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்து,  அவற்றுக்குப் பயன்பாட்டாளர்கள் ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் இல்லையென்றால் வாட்ஸ்ஆப் செயலி அழிந்துவிடும் என்றும் புதிய எச்சரிக்கை தகவல் வெளியாக உள்ளது என்று வாட்ஸ் ஆப் பீட்டாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021, பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் அதற்கு முன்பு எச்சரிக்கைத் தகவல் வெளியாகும் என்றும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு,  அதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டால்தான் வாட்ஸ்ஆப்பைப்  பயன்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ் ஆப்பில் வழக்கமாக வரும் ஏராளமான தகவல்களைப்போல், புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தகவலையும் கருதாமல் வரும் நாள்களில் பயன்பாட்டாளர்கள் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும்.

இதேபோல்,  இணைய வழி வாட்ஸ்ஆப் மூலம் தொலைபேசி அழைப்பு, விடியோ அழைப்பு ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக அந்த நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய சேவைகள் இணையவழி வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வாட்ஸ்அப் இணைப்பை இழக்கும் பழைய ஸ்மார்ட்போன்கள்..?


பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

2021 - ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தாகிவிட்டது. குறைந்தபட்சம் ஆன்ட்ராய்டு 4.0.3 வெர்ஷன் இல்லாத ஸ்மார்ட்போன்களில் நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்2, எச்டிசி டிசையர், எல்ஜி ஆப்படிமஸ் பிளாக், மோட்டரோலா டிராய்டு ரேசர் ஆகிய பிரபல மாடல் ஸ்மார்ட் போன்கள் வாட்ஸ்அப் சேவையை இழக்கும். இந்த பழைய போன்களுக்கான வாட்ஸ்அப் அப்டேட்டை அந்த நிறுவனம் வழங்காத காரணத்தால் இதுபோன்று சிக்கல் ஏற்படுகிறது.

கடந்த ஆண்டும் ஆன்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன், அதற்கும் கீழ் உள்ள வெர்ஷன் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் சேவை துண்டிக்கப்பட்டது.  ஆனால், இந்த வகையிலான பழைய ஸ்மார்ட் போன்களில் உள்ள பிற சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இதேபோல், குறைந்தபட்சம் ஐஓஎஸ் 9 இல்லாத ஆப்பிள்- ஐ போன்களில் உள்ள வாட்ஸ்அப் செயலியும் நிகழாண்டு ஜனவரி முதல் செயல்படாது. அதன்படி, ஐபோன் 4 அதற்கு முந்தைய மாடல்கள் அனைத்திலும் வாட்ஸ்அப் சேவை துண்டிக்கப்படும்.

எனினும், ஐபோன் 4எஸ், 5, 5 எஸ், 5சி, 6, 6எஸ் ஆகிய போன்களில் ஐஓஎஸ் 9 வெர்ஷனை அப்டேட் செய்து வாட்ஸ்அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

ஐபோன் 6எஸ், 6 பிளஸ், எஸ்இ பர்ஸ்ட் ஆகிய போன்களில் புத்தம் புதிய ஐஓஎஸ் 14 வெர்ஷன் வரை அப்டேட் செய்யலாம். ஐஓஎஸ் 9 வெர்ஷன் இருக்கும் ஐபோன்களில் நிகழாண்டில் மட்டும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தலாம்.

அடுத்த ஆண்டு ஐஓஎஸ் 9 வெர்ஷனும் காலாவதியாகலாம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்க ளில் உள்ள வெர்ஷனைத் தெரிந்து கொள்ள, செட்டிங்ஸ் - அபோட் போன் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதேபோல், ஐபோன்களில் செட்டிங்ஸ் - ஜெனரல்-இன்பர்மேஷன் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

வயதானவர்கள் பலர் காலாவதியான பழைய வெர்ஷன் போன்களிலேயே வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். நிகழாண்டில் அவர்களுக்கு வாட்ஸ்அப் சேவை துண்டிக்கப்படும் நிலை வந்துவிட்டதால்  அவர்கள் புதிய ஸ்மார்ட் போன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Top