10/Feb/2021 06:24:40
ஈரோடு, பிப்: ஈரோடு அருகே நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 2 ரவுடிகளை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியது
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலை என்கிற கலைச்செல்வன்(30). இதேபோல கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த குணா என்கின்ற குணசேகரன் (38). இவர்கள் இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு கருங்கல்பாளையத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்.
இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணையில் கலைச்செல்வன் மற்றும் குணசேகரன் உட்பட 10 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் வீதி பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள்ளே தகராறு ஏற்பட்டதாம். இந்தத் தகராறு மோதலாக மாறிய நிலையில் கலை என்கிற கலைச்செல்வன், குணா என்கிற குணசேகரன் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்துவிட்டு கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜு தலைமை யிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீடடு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.