logo
ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம்: எஸ்.பி. தங்கதுரை தகவல்

ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம்: எஸ்.பி. தங்கதுரை தகவல்

10/Jan/2021 06:22:07

ஈரோடு, ஜன:காவல் துறை இயக்குனர் உத்தரவுபடி கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 கிராம கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் நடந்த  தொடக்க நிகழ்ச்சியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை இந்தத் திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பெயர் பலகையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் டவுன் டிஎஸ்பி ராஜு, இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அக்ரஹார வீதியில் தலைமைக் காவலர் சிவாசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை கூறியதாவது:-

போலீஸ் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இந்த கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் செயல்படுவார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும்  தனியாக சிறப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பெயர், செல்லிடப்பேசி எண்கள் போன்ற விவரம் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் வைக்கப்பட்டிருக்கும்.

 மேலும் அந்த பகுதிக்கு உள்பட்ட காவல் நிலைய செல்லிடப்பேசி எண்கள் உயரதிகாரிகள் எண்களும் அதில் இடம் பெற்றிருக்கும். இதே போல ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 விழிப்புணர்வு காவல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்களுக்கு முக்கிய பணி பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் குற்றத் தடுப்பு தகவல்களை சேகரிப்பதுதான். இந்த சிறப்பு அலுவலர்கள் தினமும் அந்தந்த பகுதி மக்களை சந்தித்து போலீஸ் பொதுமக்கள் நல் உறவை மேம்படுத்தும்  பணியில் ஈடுபடுவார்கள். குடும்பப் பிரச்னை நிலத்தகராறு செக் மோசடி என அந்தப் பகுதி மக்கள் என்ன பிரச்னையாக இருந்தாலும் இந்த சிறப்பு அலுவலரிடம் கூறலாம். இதற்கு தீர்வு காணப்படும். சிறப்பான இந்தத் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Top