logo
 மக்கள் நலன் காக்கும் திட்டங்களையே அரசு செயல்படுத்தி வருகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

மக்கள் நலன் காக்கும் திட்டங்களையே அரசு செயல்படுத்தி வருகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

03/Jan/2021 10:49:12

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மாத்தூரில் சிவிபி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாமினை தொடங்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:

பொதுமக்களுக்கு ஏற்படும் கண்குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்யும் வகையில் சிவிபி அறக்கட்டளையின் சார்பில் கிராமங்கள் தோறும் மக்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று கண் சிகிச்சை முகாம்கள்  நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மாத்தூரில் சிவிபி  அறக்கட்டளையின் சார்பில் ஒளிமயமான வாழ்வு முகாம் தொடங்கி  வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குமாரமங்கலம், மண்டையூர்  மற்றும் ஆவூர் ஆகிய கிராமங்களில் ஒளிமயமான வாழ்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் பொது மக்களுக்கு கண் நோய் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதுடன் கண் அறுவை சிகிச்சை  தேவைப்படும் நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதே போன்று கண் கண்ணாடி அணிய வேண்டிய நபா;கள் அனைவருக்கும்ட சிவிபி அறக்கட்டளையின் சார்பில் உயா;தரமான கண் கண்ணாடிகளும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. விராலிமலை சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பொதுமக்களின் தேவை அறிந்து ஏராளமான நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று விராலிமலை சட்டமன்ற தொகுதி மட்டுமல்லாமல் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில்   காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இதனால் புதுக்கோட்டை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும். இதே போன்று பொது மக்கள் நலன் காக்கும் திட்டங்களை  அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களின் பயன்களை அனைவருக்கும் உரிய முறையில் கொண்டு சேர்க்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். 

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், பொது சுகாதாரத் துணை இயக்குநர் பா.கலைவாணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், சிவிபி அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  


Top