logo
கோபிசெட்டிபாளையத்தில்  ரூ.1.27கோடியில்  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோபிசெட்டிபாளையத்தில் ரூ.1.27கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

02/Jan/2021 11:22:58

ஈரோடு ஜன: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், கொங்கர்பாளையம் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பழையூர்,  மேற்கு காலனி வினோபாநகர் மற்றும் நேருவீதி ஆகிய பகுதிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. 

மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில் நடைபெற்ற  விழாவில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று ரூ.1.27கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு பூஜையிட்டு, 112 நபர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், 8 நபர்களுக்கு முதலமைச்சரின்  சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், 11 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெற ஆணையினையும் வழங்கினார்.

 இந்நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:   பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000- வழங்கி வந்ததை உயர்த்தி, தற்பொழுது ரூ.2,500- ரொக்கம் மற்றும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஒரு துண்டுக்கு பதிலாக ஒரு முழுக் கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள், சாலைகள் மேம்பாடு ஆகியவை  நிறைவேற்றப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு என ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பாடப்புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகப் பை, காலணி உள்ளிட்ட அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு உள் ஒதுக்கீடுடாக 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டினை  அரசு வழங்கியுள்ளது. 

ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியரும், மருத்துவப் படிப்பு படிப்பது என்பது ஒரு எட்டாக்கனியாக இருந்த நிலை மாறி, அந்த ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியரும் மருத்துவப் படிப்பு படிக்கின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இவர்களுக்கு மருத்துவக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளதால் அவர்களுக்கு உதவி செலுத்துகின்ற வகையில் ரூ.16 கோடி சுழல் நிதி ஏற்படுத்தி அந்தக் கட்டணத்தையும் அரசே செலுத்துகின்றது.எனவே பொதுமக்கள் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று பயன்பெற வேண்டும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

தற்போது  அம்மா ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மேற்கு புது காலனிக்கு கான்கிரீட் சாலை வடிகால் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் ரூ.43.78 இலட்சம் மதிப்பீட்டிலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கு புதுகாலனிக்கு கான்கிரீட் சாலைகள் வடிகாலுடன் அமைக்கும் பணிக்கு ரூ.19.76 லட்சம் மதிப்பீட்டிலும், கொழிஞ்சிக்காடு சாலையினை புதுப்பித்து புதிய தார்சாலையாக மேம்படுத்தி மாற்றியமைத்தல் பணி ரூ.48 லட்சம் மதிப்பீட்டிலும் ஓடைமேடு அருகில் உள்ள சின்னப்பள்ளம் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணி ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், மலைவாழ் மக்களுக்கு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன்  கூடிய பசுமைவீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வினோபா நகரைச் சேர்ந்த 8 பயனாளிகளுக்கு பசுமை வீடுகளுக்கான ஆணையினையும், கொங்கர்பாளையம் ஊராட்சியினை சார்ந்த 112 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா பெறுவதற்கான ஆணையினையும், 11 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினையும் என மொத்தம் 131 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் கே.கே.காளியப்பன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கே.நவமணி, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் உட்படபலர் கலந்து கொண்டார்கள்.

Top