logo
வல்லநாடு கண்மாய் உடைப்பு: மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாத்த மக்கள்.

வல்லநாடு கண்மாய் உடைப்பு: மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாத்த மக்கள்.

02/Jan/2021 08:00:23

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வல்லநாடு கண்மாயில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறிய நீரை அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்தனர்.

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மணியம்பலம், வாண்டாக்கோட்டை, வல்லத்திராகோட்டை உள்ளிட்ட 5 ஊராட்சிக்கு உட்பட்ட வல்லநாடு கண்மாய் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய கண்மாயாக  கருதப்படுகிறது. இந்த கண்மாயை நம்பி சுமார் 5000 ஏக்கர் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் போதிய மழை இல்லாததால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக  அந்த கண்மாய் தூர்வாரப்படாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில்  குடிமராமத்து திட்டத்தின்கீழ் வல்லநாடு கண்மாய் தூர்வாரப்பட்டன.

  இந்நிலையில்,கண்மாயில் உள்ள 12 மதகுகளில் கிழக்கு புறம் உள்ள சிறுமடை மதகில் உடைப்பு ஏற்பட்டு வீணாக நீர் வெளியேறியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை இதைப்பார்த்த மணியம்பலம் பகுதி மக்கள் மணல் மூட்டைகளை கொண்டு நீர் வேளியேறுவதை தடுத்தனர். இருப்பினும், தொடர்ந்து, நீர் வேளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.63 லட்சம் மதிப்பில் இந்த கண்மாய் தூர்வாரப்பட்டன. ஆனால், அந்த பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பை நாங்கள் தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு அடைத்து வைத்துள்ளோம். ஆனாலும், தண்ணீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து வெளியேறினால், உடைப்பு பெரிதாகி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் சூழல் ஏற்படும். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.


Top