logo
புதுக்கோட்டை  பாரி நகரில் மழை நீர்- கழிவு நீர்  செல்லும் கால்வாய் இல்லாததால் 15 ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள்

புதுக்கோட்டை பாரி நகரில் மழை நீர்- கழிவு நீர் செல்லும் கால்வாய் இல்லாததால் 15 ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள்

02/Jan/2021 11:14:10

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புறநகர் பகுதியாகவும், கவிநாடு மேற்கு ஊராட்சிக்குள்பட்ட பகுதியான (மாலையீடு) பாரிநகரில் கழிவுநீர் மற்றும் மழை நீர் கால்வாய் வசதி இல்லாததால் சாலைகளிலும், வீடுகளின் முன்புறமாக சாலைகளில்   கழிவு  நீருடன் மழை நீரும்   தேங்கி   தீவு  போல காட்சியளிக்கிறது. அப்பகுதி மக்களின் இந்தக் கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக  புறக்கணிக்கப்படுவதால் வரும் தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சிபகுதியில் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதியில் சுமார் நூறு வீடுகள் உள்ளன.  மூன்று  வீதிகளில் சுமார் 100 குடியிருப்புகளில் சுமார் 600 -க்கும் மேல்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் உள்ள அனைத்து  வீதிகளிலும் கழிவு நீர் செல்லும்  கால்வாய் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும்  கழிவு நீர் வீதிகளில்  தேங்கி நிற்பதால் அதில் தொற்று நோயைப் பரப்பும் கொசுக்கள்  உற்பாத்தி ஆகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதன், புதுக்கோட்டை- திருமயம் புறவழிச்சாலையில் மவுன்ட்சீயோன் பள்ளி எதிரே செல்லும்  பிரதான சாலையின்  கிழக்குப்பகுதி  புதுகை நகராட்சியிலும், மேற்குப்பகுதியில் அமைந்துள்ள (பாரிநகர்) இக்குடியிருப்பு கவிநாடு மேற்கு ஊராட்சியிலும் வருகின்றன. மேலும், கவிநாடு மேற்கு ஊராட்சியின்  கடைக்கோடி எல்லையாகவும்  இருப்பதால், மொத்தத்தில் ஊராட்சி நிர்வாகத்தால்  கைவிடப்பட்ட தீவைப் போலாகிவிட்டது.  இப்பகுதியை நகராட்சியுடன் இணைக்க இங்கு வசிப்பவர்கள் செய்த முயற்சி கண்டுகொள்ளப்படவில்லை. இதன்  காரணமாக எவ்வித அடிப்படை வசதியும்  கிடைக்காத  நிலை நீடிப்பதாக  வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

 இந்நகரில் 10ஆண்டுகளுக்கு முன்பு சொற்ப எண்ணிக்கையிலேயே  குடியிருப்புகள் இருந்தன.ஆனால,  அருகில் பள்ளியும்,  மதுரை, காரைக்குடி,  ராமேஸ்வரம் போன்ற தென்மாவட்டங்களுக்குச் செல்லும் புறவழிச்சாலை  அமைந்துள்ளதால்,  கடந்த சில ஆண்டுகளில் 100 -க்கும்  மேல்பட்ட  வீடுகள்  கட்டப்பட்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், நகராட்சியிலும்  சேராமல்,  ஊராட்சி  நிர்வாகத்தின்  பாராமுகத்தாலும்  இக்குடியிருப்புப்பகுதி குடிசைப்பகுதியாக மாறுகிறதோ என இப்பகுதியை நேரில் பார்ப்பவர்கள் மனதில்  எண்ணம் உருவாகும் என்பதில் சந்தேகமி்ல்லை.

புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத் துறையும் நகராட்சி நிர்வாகமும் தீவிர கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் நீர் தேங்கும் சூழ்நிலையை உருவாக்கக் கூடிய வீடுகள் மற்றும் தனியார் கட்டுமானப் பணியில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோரால் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 

இந்தச் சூழலில், புதுகை நகராட்சியின் விளிம்புப் பகுதியும், கவி நாடு மேற்கு ஊராட்சிக்கு உள்பட்ட பாரி நகரில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர்-கழிவுநீர்க் குட்டையால் அப்பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக்குரியதாகிவிட்டது. 

 எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என பாரி நகர் பகுதி மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  மேலும்,பிரதான சாலையில் இருந்து  நகருக்குள் செல்லும் சாலை தொடக்க காலத்தில் சுமார் 40 அடி அகலம் இருந்தது. தற்போது ஆக்கிரமிப்புகளால் பல  அடிகள் சுருங்கிவிட்டது. இதை நில அளவைத்துறையினர் அளவை செய்யவேண்டிய அவசியமும் உள்ளது.

இப்பிரச்சினை குறித்து  குடியிருப்போர் நலச்சங்கத்தினர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இதுவரை  இல்லை. வரும் தேர்தலை புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இப்பகுதி மக்கள். எனவே, கால்வாய் இல்லாமல் தொற்று நோய் பரவும்  அபாயத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே  அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

(பட விளக்கம்)

புதுக்கோட்டை அருகே  மாலையீடு பாரிநகரில்  கால்வாய் வசதியில்லாததால்  சாலையில் தேங்கியுள்ள  கழிவு நீருடன் கலந்து தேங்கி நிற்கும் மழைநீர்.   

 

Top