logo
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஈரோட்டில் டாஸ்மாக் பார்கள் திறப்பு

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஈரோட்டில் டாஸ்மாக் பார்கள் திறப்பு

29/Dec/2020 09:52:37

ஈரோடு, டிச: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக  மதுக்கடைகளுடன் கூடிய பார்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டி இருந்தன. ஆனால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது மது கடைகள் திறக்கப்பட்டாலும் கடந்த 9 மாதங்களாக பார்கள்  மட்டும் திறக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 217 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மது கடையுடன்  141 பார்கள்  செயல்பட்டு வருகிறது. பார்களை திறக்க அனுமதி கிடைத்ததை அடுத்து ஈரோட்டில் இன்று முதல் பார்கள் திறக்கப்பட்டன. 12 மணி அளவில் பார்கள் திறக்கப்பட்டன.கடந்த 9 மாதங்களாக பார்கள் மூடி இருந்ததால் தூசி மண்டி போய் இருந்தது. இதனால் பணியாளர்கள் பார்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் நாள் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்கள் திறக்கப்பட்டு இருந்தன.  

அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் பார்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. நுழைவாயில் மதுப்பிரியர்கள்  நுழைந்தபோது அவர்களது கையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. 

உடல் வெப்பநிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே பாருக்குள்  அனுமதிக்கப்பட்டனர். பாருக்கு வந்தவர்களின் செல்போன் எண், பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

பாரில் பணியாற்றும் பணியாளர்கள் முக கவசம் அணிந்தே பணி புரிந்தனர். வயதானவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை.  பார்களுக்கு இருக்கும் கழிவறைகள் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. முதல் நாள் என்பதால் குறைந்த அளவு  எண்ணிக்கையிலேயே பார்கள் திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. 


Top