logo
நூல் விலை உயர்வைக்கண்டித்து ஈரோடு மாவட்டத்திலுள்ள 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்

நூல் விலை உயர்வைக்கண்டித்து ஈரோடு மாவட்டத்திலுள்ள 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்

21/Dec/2020 05:16:11

ஈரோடு-டிச: ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம் தினமும் 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழக அரசின் இலவச , வேட்டி சேலைகள் பல்வேறு கூட்டுறவு சொசைட்டி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 40 சதவீத இலவச வேட்டி, சேலைகள் ஈரோட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ரயான் துணி நூலின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ராயன் துணிகளை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் 24 லட்சம் மீட்டர் ரயான்  துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம்  பேர் ஈடுபட்டு வருகின்றனர்.  

நூல் விலை உயர்வால் தொடர் நஷ்டம் காரணமாக டிச 21  முதல் வரும் 27 -ஆம் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை  விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் காளிங்கராயன் பாளையம் போன்ற பகுதியில் உள்ள விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து, ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ராயன் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக ராயன் துணிகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நூல்கள் விலை அதிகரித்துள்ளது. இங்கு 120 கிராம் 150 கிராம் நூல் அதிகமாக பயன்படுத்த வருகிறோம். தீபாவளியின் போது இந்நூல் ஒரு கோன் ரூ.150-க்கு வாங்கினோம். இதன் மூலம் ஒரு மீட்டர் துணி ரூ. 20 -க்கு விற்பனை செய்தோம்.

தற்போது நூல் விலை ரூ. 176  ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு மீட்டர் துணி விலை ரூ .22 என்ற நிலையிலேயே உள்ளது. நூல் அடக்க விலைக்கு கூட துணி விலை போகாததால் உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.எனவே இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ரயான் துணி உற்பத்தியை மட்டும் நிறுத்தி உள்ளோம். இதனால் 16.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும். இதன் மூலம் ரூ.40 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும். எனவே நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

                                                   


Top