logo
காவிரி காப்பாளன் பட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி பொருத்தமானவர்:  ஆளுநர் புகழாரம்

காவிரி காப்பாளன் பட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி பொருத்தமானவர்: ஆளுநர் புகழாரம்

04/Feb/2021 09:04:56

சென்னை:காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம், காவிரி காப்பாளன் என்ற பட்டத்திற்கு முதல்வர் கே.பழனிசாமி பொருத்தமானவராகிறார் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார்.


2021-ஆம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டத் தொடர் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டிற்கான கூட்டத் தொடர் இன்று முதல் நடைபெற்று வருகிறது.


இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை உரையுடன் இந்த கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து ஆளுநர் பேசும்போது, தமிழகத்தை நாட்டிலேயே தலைசிறந்த மாநிலம் ஆக்கும் இலக்கினை அடைவதில் இந்த அரசு வெற்றி நடைப்போடுகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால், சமூகநீதி, சமநீதியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டால் 435 மாணவர்கள் இந்தாண்டில் பயனடைந்தது மனமகிழ்ச்சி அளிக்கிறது.


கொரோனாவை எதிர்கொள்ள அரசு இயந்திரங்களை திறம்பட ஒருங்கிணைத்த பெருமை முதல்வரையே சேரும். கொரோனா காலத்தில் உழைத்த முன்களப்பணியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள். கொரோனா காலத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை முறையாக கையாண்ட ஒரே பெரிய மாநிலம் தமிழகம் தான். தமிழக மக்கள் அனைவருக்கும் உரிய நேரத்தில் படிப்படியாக கொரோனா தடுப்பூசி போடப்படும். அம்மா மினி கிளினிக் அமைத்த முதல்வருக்கு பாராட்டுகள்.


தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். சட்டசபை தேர்தலை முறையாக எதிர்கொள்ள காவல்துறை தயாராக உள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் காவலில் இருக்கும் 12 மீனவர்களையும் மீட்டெடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.



விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம், ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி பொருத்தமானவராகிறார். நுண்பாசன திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.


தமிழ் மொழியின் பெருமையை வளர்ப்பதே அரசின் இலக்கு. சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் விரைவில் செயல்பட துவங்கும். பல்வேறு துறைகளின் சிறப்பான செயல்பாடுகளினால், தேசிய அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்று தமிழகம் வெற்றிநடை போடுகிறது.


அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முதல்கட்ட பணிகள் மார்ச் மாதத்தில் துவங்கும். மேகதூது திட்டத்தை நிராகரிக்க மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு தேவையான நிதியை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.


மூன்றில் ஒரு பங்கு வருவாய் கிராமங்களில் வரும் மார்ச் 31க்குள் ‘பாரத் நெட்’ திட்டம் செயல்படுத்தப்படும். எஞ்சிய கிராமங்களில் நவம்பர் 30-ம் தேதிக்குள் பாரத் நெட் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். கீழடி அகழ்வாராய்ச்சியில் சங்ககால பண்பாட்டின் செழுமையான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.


‘தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை’ கட்டமைப்பின் மூலம் பல்வேறு அரசு சேவைகள் தடையின்றி வழங்கப்படும். முதல்வரின் உதவி மையத்தின் 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால், வீட்டிலிருந்தே அரசின் சேவைகளை விரைவில் பெறலாம். தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக,, ‘புதிய தொழில் கொள்கை’ விரைவில் வெளியிடப்படும்.


ரேஷன்கார்டுகளுக்கு பருப்பு, பாமாயில், சர்க்கரை வழங்க  ரூ.5,402 கோடி கூடுதல் மானியத்தை அரசு ஏற்றது. சொத்து ஆவணங்களை அடமானம் வைத்து பத்திரங்களை இணையவழியில் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படும். கொரோனா நிவாரண நடவடிக்கையாக 19.95 லட்சம் மெட்ரிக். டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து, உறுதியுடனும், மனதைரியத்துடனும் நாம் மீண்டும் வருவோம்” என்றார்.


முன்னதாக ஆளுநர் உரை நிகழ்த்த தொடங்கியதும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் அரசு மீதான ஊழல் புகார்கள், ஏழு பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச முற்பட்டனர். ஆனால் அவர்களை தொடர்ந்து ஆளுநர் பேச அனுமதிக்காமல் மத்திய அரசு, தமிழகத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி அனுமதி அளித்திருக்கிறது என்று பதில் அளித்தார். ஆனாலும் எதிர்கட்சி தலைவர் தொடர்ந்து பேச முற்பட்டும் அவரை பேச ஆளுநர் அனுமதிக்கவில்லை. அதை தொடர்ந்து எதிர்கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.


அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தி.மு.க. சார்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக 97 பக்க அறிக்கையை ஆளுநரிடம் அளித்தோம். மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாகவும் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததை கண்டித்தும் அவர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம். இன்று மட்டுமல்ல இந்த கூட்டத் தொடர் முழுவதையும் நாங்கள் புறக்கணிக்க உள்ளோம்.


மத்திய பட்ஜெட், தமிழக மக்களுக்கு கொடுத்த லாலி பாப் என்று நான் ஏற்கனவே விமர்சனம் செய்துள்ளேன். இந்நிலையில் ஆளுநர், மத்திய அரசு தமிழகத்திற்கு  ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளதாக கூறுகிறார். இப்படி ஏன் நான் கூறுகிறேன் என்றால், 2015 ஆண்டு பட்ஜெட்டில் மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியாகியது. 2019 பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி நாடகம் நடத்தினார். ஆனால் 2021 வந்ததும் இதுவரை ஒரு செங்கலை கூட நடவில்லை. பெட்ரோல், டீசல், கேஸ் என அனைத்து விலையும் உயர்த்து உள்ளது. விலைவாசியும் விஷயம் போல் ஏறி உள்ளது. ஆளுநர் இது கடைசி பட்ஜெட் என்று அவரே தெரிவித்தார். அதை உளமார வரவேற்கிறேன் என்றார்.


Top