logo
ஈரோடு  மாகாளியம்மன் கோவில் உண்டியலை தூக்கி சென்ற  மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை

ஈரோடு மாகாளியம்மன் கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை

01/Jan/2021 04:39:26

ஈரோடு, ஜன: ஈரோடு ரங்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாகாளியம்மன் கோயில் உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். மேலும், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக  வளாகத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. 

வழக்கம்போல் வியாழக்கிழமை  இரவு கோயிலை பூட்டி விட்டு பூசாரி  சென்று விட்டார்.  வெள்ளிக்கிழமை காலையில் புத்தாண்டையொட்டிசிறப்பு பூஜை செய்வதற்காக கோயிலை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது கோயிலின் இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந் ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது வளாகத்தில் இருந்த  காணிக்கை உண்டியல் காணாமல் போனதும் தெரியவந்தது.

இதுகுறித்து  தகவலறிந்த ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோயிலில் நள்ளிரவில் புகுந்த  மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்றது தெரியவந்தது. உண்டியலில் ரூ 10,000 வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக உண்டியல் திறக்கப்படாததால் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரியவில்லை.

இந்நிலையில் கோயிலில் இருந்து  காணாமல் போன  உண்டியல் அருகே உள்ள சடயம்பாளையம்  புறவழிச்சாலையில்  உள்ள புதரில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உண்டியல் கிடந்த இடம் அருகே ஒரு பையில் சில பண நோட்டுகள் சிதறி கிடந்தது. உண்டியலையும் பணத்தையும் போலீசார் மீட்டு கோயில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து   விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் பழைய பாளையம் ஓடை மேட்டில் உள்ள மதுரைவீரன் சக்தி மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை  திருட்டிச்சென்றனர். அதையடுத்து இரண்டு சம்பவங்கள் நடந்து உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Top