logo
 பட்டா கேட்டு கோபி  வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பட்டா கேட்டு கோபி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

18/Dec/2020 04:47:13

ஈரோடு, டிச: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை கிராமத்தில் வீடற்றவர்களுக்கு 1993-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டுமைனை பட்டாக்களை தற்போது மீண்டும் வேறு நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளதாகக் கூறியும் 1993-ஆம் வழங்கப்பட்டவர்களுகே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்டவர்கள் இலவச வீட்டுமனை பட்டாவுடன் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சைகோபி ஊராட்சி புதுக்கரைபுதூர் கிராமத்தில் வசித்து வந்த 197 நபர்களுக்கு இலவச வீட்டுமனை இடம் கோரி அரசிடம்  கோரிக்கை வைத்ததின் பேரில் 1993 – 1995 -ஆம் ஆண்டுகளில் அரசால் 197 நபர்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது அதில் 97 இலவச வீட்டுமனை பட்டாக்களை தகுதி இல்லை என்று கூறி ரத்து செய்துவிட்டு, வேறு நபர்களுக்கு அதுவும் தகுதியில்லாத நபர்களுக்கும் வேறு இடத்தில் இடம் உள்ள வசதி வாய்ந்த நபர்களுக்கும் சில அரசியல் பிரமுகர்களின்  தூண்டுதலின் பேரில் பட்டா வழங்கப்படவுள்ளதாகவும் தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை எங்களின் கவனத்திற்கு வராமலேயே சிலரின் சுய லாபத்திற்காகவும் சில அரசியல் வாதிகளின் தூண்டுதலின் பேரிலும் எங்கள் பெயரில் உள்ள பட்டாவை வேறு நபர்களுக்கு மாற்றித்தர பரிந்துரைத்துள்ளனர்.

 ஆகவே, நாங்கள் தற்போது அங்கு வசித்து வரும் சூழ்நிலையில் வேறு நபர்கள் அந்த இடத்திற்கு உரிமை கொண்டாடி வரும்பொழுது தேவையற்ற குழப்பங்களும் மோதல் போக்கும் உருவாகியுள்ளதாகவும் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை எங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் தற்போது வழங்கப்பட்டுள்ள வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்து வேறு நபர்களுக்கு பட்டா வழங்கும் ஆணையை நிறுத்தி வைக்கவும் வேண்டும் என்று வலியுறுத்தி  எல்லமடை பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்கச்சென்ற பொதுமக்களை அங்கிருந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உங்களுக்கு எல்லாம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கமுடியாது என்று தெரிவித்ததையடுத்து மனுக்கொடுக்கச்சென்ற பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சமாதானப்படுத்தியதுடன் வட்டாட்சியர் தியாகராஜு மற்றும் நிலவருவாய் ஆய்வாயர் ரஜிக்குமார் ஆகியோரை அழைத்து பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய வட்டாட்சியர் குழு அமைத்து வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது வழங்கப்பட்டுள்ள வீட்டுமனை பட்டாக்களில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. 


Top