17/Dec/2020 05:03:47
புதுக்கோட்டை மாவட்டம்,
கறம்பக்குடி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி சேதமடைந்த சாலையில் நாற்று நடவு செய்து
அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில்
ஆத்தியடிப்பட்டி- கீழ்வாண்டான்விடுதி சாலை
மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமான நிலையில் இருந்துள்ளது. அப்பகுதியில் தற்போது,
பெய்துவரும் மழையால் சேதமடைந்த சாலைப்பள்ளங்களில்
மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு தகுதியற்ற சாலையாக மாறியது. இதனால், அப்பகுதி மக்கள்
போக்குவரத்திற்காக அவதியடைந்து வந்துள்ளனர்.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை
முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையாம். அதனால், சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி
அப்பகுதி பெண்கள் சாலைப்பள்ளங்களில் நாற்று நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.