logo
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும்: ரெட்டி இளைஞர் பேரவை வேண்டுகோள்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும்: ரெட்டி இளைஞர் பேரவை வேண்டுகோள்

13/Dec/2020 07:13:37

சென்னை- டிச: ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு சென்னையில் உருவச்சிலை அமைப்பதுடன் ரெட்டியார் சமுதாய முன்னேற்றத்துக்கு தமிழக அரசும், மத்திய அரசும் இட ஒதுக்கீடு வழங்கி உதவிட வேண்டும் என ரெட்டி இளைஞர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ரெட்டி இளைஞர் பேரவை தலைவர் ரவீந்திர ரெட்டி, பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் திருவுருவப் படம் சட்டமன்ற பேரவையில் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் ரெட்டியார் சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இந்தியாவின் குறிப்பாக தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றவரான ஓ.பி.ராமசாமி ரெட்டியாருக்கு முழு உருவ வெண்கல சிலையை தமிழக அரசு சார்பில் சென்னையில் அமைக்க வேண்டும். அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 1-ஆம் தேதி ஓமந்தூராரின், 125 -ஆவது பிறந்த நாள் விழா. அதற்கு முன்னதாகவே அவருக்கு சிலை அமைக்க வேண்டும். மேலும் ரெட்டியார் சமூகம் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியுள்ளது. அதனை போக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் ரெட்டியார் சமூக மக்கள் உள்ளோம். அனைவரும் மொழி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். கொண்டா ரெட்டி, கொண்ட காப்பு,அயோத்தி ரெட்டி, கோட்டை ரெட்டி, ரெட்டி கஞ்சம் உள்ளிட்ட 32 உட்பிரிவுகளைக் கொண்ட ரெட்டியார்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளோம்.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பழங்குடியினர் பட்டியலில், கொண்டா ரெட்டி, கொண்ட காப்பு பிரிவினர் இடம் பெற்றுள்ளனர். பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரெட்டியார் சமூக உட்பிரிவினருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சாதி சான்றிதழ்: மேலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, ரெட்டி கஞ்சம் -பிரிவை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்களுக்கு தென் மாவட்டங்களில் சாதி சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. ஆனால் வட மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் சாதி சான்றிதழ் கிடைப்பது இல்லை. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஏராளமான இளைஞர்கள் அரசு வேலைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது -கஞ்சம் ரெட்டி- சமூக மக்களுக்கு எளிதாக சாதி சான்றிதழ் கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டிருந்தார். கஞ்சம் ரெட்டி சமூக மக்களை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெட்டியார் சமூகத்தில் உள்ள முன்னேறிய வகுப்பினர் பயனடையும் வகையில் தமிழகத்தில் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசின் அனைத்து துறை பணி நியமனங்களிலும் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்த்கும் உரிய பிரதிநித்துவம் வழங்கி வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Top