logo
புதிய மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்:ஐ.என்.டி.யு.சி. வலியுறுத்தல்

புதிய மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்:ஐ.என்.டி.யு.சி. வலியுறுத்தல்

12/Dec/2020 08:57:54

ஈரோடு- டிச:புதிய மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று ஐ.என்.டி.யு.சி. கருத்தரங்கில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி எம்பிளாயீஸ் அன்ட் கான்ட்ராக்ட் லேபரர்ஸ் யூனியன் (ஐ.என்.டி.யு.சி.) மற்றும் பன்னாட்டு பொதுத்துறை கூட்டமைப்பு சார்பில், மின்சார சட்ட திருத்த மசோதா நிறுத்திடக்கோரி கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்குக்கு ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி, மாநில ஐ.என்.டி.யு.சி., தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், பன்னாட்டு பொதுத்துறை கூட்டமைப்பின் தெற்காசிய மண்டல செயலாளர் ரா.கண்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது:

மின்சார சட்ட திருத்த மசோதாவில் உள்ள குறைபாடுகள் குறித்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சதீஸ்கர் ஆகிய மாநில முதல் மந்திரிகள், பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். ஆனால், மின்சார சட்டத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. இந்த சட்டம், புதிய மின் உற்பத்திகள் தனியாரிடம் ஒப்படைக்க வழிவகை செய்கிறது. அவர்களுக்கு அதிக அளவில் மானியம் கிடைப்பதால், தற்போதைய மின் உற்பத்தியில், 20 சதவீதத்தை பெரிய தனியார் நிறுவனங்கள் செய்து வருகிறது.

மின்சார சட்டம்: இதன் மூலம், மின்கட்டணம் பலமடங்கு உயரும். விவசாயம், வீடு, தொழில்களுக்கான மானியம், மின் கட்டண சலுகை, மின் பயன்பாட்டில் சலுகை போன்றவை நிறுத்தப்படும். பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, எல்.ஐ.சி., போன்றவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்கின்றனர்.

நாளடைவில், அவை தனியார் வசமாகும். தற்போது, லட்சுமி விலாஸ் வங்கி, சிங்கப்பூரை சேர்ந்த டி.பி.எஸ். என்ற வங்கியுடன் இணைத்துள்ளனர். வரும் காலங்களில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் கையில், இங்குள்ள பல நிறுவனங்கள் கைமாறும் நிலை ஏற்பட்டுள்ளதை தடுத்தாக வேண்டும் என்றார் அவர்.

அதைத்தொடர்ந்து, நடந்த ஐ.என்.டி.யு.சி. கூட்டத்தில், புதிய மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். தொழிலாளர் நல சட்ட திருத்த மசோதா உத்தரவுகளை நிறுத்த வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களையும் புதிய நபர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வம், பன்னாட்டு பொதுத்துறை கூட்டமைப்பின் மகளிர் அணி தலைவி பிரேமா வால்டர், மண்டல செயலாளர் சிவன், பொதுச்செயலாளர் சுவர்ணராசு, பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top