logo
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி வகுப்புகள் இன்று தொடக்கம்

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி வகுப்புகள் இன்று தொடக்கம்

07/Dec/2020 03:59:20

புதுக்கோட்டை:   கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்களின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை டிச.7- முதல் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

அதையொட்டி,  புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு  மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.  முதல்நாளான திங்கள்கிழமை  கல்லூரியில்   மூன்றாம் ஆண்டில் பயிலும் அனைத்துத்துறை மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  கல்லூரி  வளாகத்துக்குள் வந்த அனைத்து  மாணவ, மாணவிகளுக்கும் கிருமிநாசினி மற்றும் முககவசம் வழங்கப்பட்டன.

 இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் முதல்வர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற  மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்துக்கு  கல்லூரியின் தலைவர், கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  ஐந்தாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிப் பேசுகையில், கற்றலில் பேரார்வம் கொண்டு பெருந்திரளாக நீங்கள் கல்லூரிக்கு வந்திருப்பதை நினைத்து பெருமகிழ்வு கொள்கிறோம்.

அதேவேளையில், அனைவரும் சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை முழு கவனத்துடன் கடைபிடிக்கவேண்டும். பாடத்திட்டங்களை நன்கு கவனித்து கற்கவேண்டும்.  செயல்முறை விளக்கங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும்.  மேலும் வரும் பருவத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்றும் வாழ்த்தினார்.

  நிறைவில், இயந்திரவியல் துறைத்தலைவர் ஜாஹீர் உசேன் நன்றி கூறினர். நிகழ்ச்சியை பேராசிரியர் திருமலையரசன் தொகுத்து வழங்கினார்.

Top