logo
சென்னை உயர்நீதிமன்றத்தில்  10 கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்பு

03/Dec/2020 10:52:11

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.சதிக்குமார், கே.முரளி சங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க சமீபத்தில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

அதன்படி உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 பேருக்கும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிபிரமானம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் சென்னையில் இருந்த நீதிபதிகளும், மதுரையிலிருந்த நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

பதவியேற்ற நீதிபதிகளை அரசு தலைமை வழக்ககுரைஞர் விஜய் நாராயண், உயர்நீதிமன்ற  வழக்குரைஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் சுந்தரேசன், பெண் வழக்குரைஞர் சங்க தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் வரவேற்று பேசியதுடன், முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தனர். புதிய நீதிபதிகளின் நியமனங்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்து காலியிடங்கள் 12ஆக குறைகிறது.

ஏற்கெனவே நீதிபதிகள் புஷ்பா சத்தியாநாராயணா, வி.எம்.வேலுமணி, நிஷா பானு, அனிதா சுமந்த், பவானி சுப்பராயன், தாரணி, கிருஷ்ணவள்ளி, ஹேமலதா, ஆஷா ஆகிய 9 பெண் நீதிபதிகள் உள்ள நிலையில், தற்போது பதவியேற்ற நீதிபதிகள் ஆனந்தி, கண்ணம்மாள், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகிய 4 பேரையும் சேர்த்து பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

நீதிபதி முரளிசங்கர் மற்றும் நீதிபதி தமிழ்ச்செல்வி ஆகியோர் தம்பதி. இந்திய நீதித்துறையில் கணவன் மனைவி பொறுப்பேற்பது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே இதேபோன்ற நிகழ்வு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நடந்துள்ளது.


Top