logo
புரெவி புயல் எதிரொலி: ஈரோடு மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

புரெவி புயல் எதிரொலி: ஈரோடு மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

03/Dec/2020 09:07:03

ஈரோடு: புரெவி புயல் எதிரொலியால் ஈரோடு மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி  சோதனைச்சாவடி  அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டுச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு,சுற்றுப்புற மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து மாடுகள் வரத்தாகும். மாடுகளை வாங்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம். 

கடந்த வாரம் நிவர் புயல் மழை காரணமாக மாடுகள் வரத்து குறைந்தது. இந்நிலையில், புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்காரணமாக நேற்று கூடிய சந்தையில், மாடுகள் வரத்து, வெளிமாநில வியாபாரிகள் வரத்தும் குறைந்து காணப்பட்டது. இதனால், சந்தையில் விற்பனை மந்தமாக நடந்தது.

இதுகுறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில், புயல் எதிரொலியால், இந்த வாரம் கூடிய சந்தையில் குறைந்தளவே மாடுகள் வரத்தானது. பசு-450, எருமை-200, கன்று-50 என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்காக  வந்தன. பெரும்பாலான வியாபாரிகள் சந்தைக்கு வராததால் இந்த வாரம் விற்பனை மந்தமாக  இருந்தது, என்றனர். 


Top