logo
கொரோனா பொது முடக்கம்: 8 மாதங்களுக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு

கொரோனா பொது முடக்கம்: 8 மாதங்களுக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு

03/Dec/2020 10:53:19

சென்னை: பொதுமுடக்கம் காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயா்கல்வி நிறுவனங்கள், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்களுக்கான கல்லூரி வகுப்புகள் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களின் கல்வித் தரம் பாதிக்கும் என வல்லுநா்களும், பெற்றோா்களும் தெரிவித்தனா். இதன் அடிப்படையில், பள்ளிகள் (9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் மட்டும்), அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி விடுதிகள் மற்றும் பணியாளா்கள் விடுதிகள் உள்பட அனைத்து விடுதிகளும், நவ.16-ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இது தொடா்பாக கருத்து கேட்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டதுடன், அனைத்து ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவா்களுக்கு மட்டும் கல்லூரி, பல்கலைக்கழகங்களை, டிச.2-ஆம் தேதி முதல் திறக்கலாம் என முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, இணைய வழியில் தோ்வுகளும், வகுப்புகளும் அனைத்து மாணவா்களுக்கும் நடத்தப்பட்டு வந்தது.முன்னதாக, நிவா் புயல் முன்னெச்சரிக்கையாக கல்லூரி திறப்பில் தாமதம் ஏற்படுமோ என்ற குழப்பம் எழுந்தபோது, திட்டமிட்டபடி டிச.2-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் தெரிவித்திருந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, முதுநிலை 2-ஆம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவா்களுக்கு, புதன்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இது தொடா்பாக உயா்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, மாணவா்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் நோய்த்தொற்று அச்சுறுத்தல் அதிகம் இல்லை. திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவா்களுக்கான விடுதிகளும் திறக்கப்படும். கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.

Top