logo
மின்சார வாரிய அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று: ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் மக்கள் அவதி

மின்சார வாரிய அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று: ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் மக்கள் அவதி

01/Dec/2020 11:14:57

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பாரதி வீதியில் செயல்படும் தமிழ்நாடு மின்சார வாரிய புதுப்பாளையம் பிரிவு அலுவலகத்தில் அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கவில்லை என்றும் மற்ற அலுவலர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரையிலும் பணிக்கு செல்வதில்லை எனக்கூறியும் அனைத்து அலுவலர்களும் பணி புறக்கணிப்பு செய்துள்ளதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரதிவீதியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மின்சார வாரிய புதுப்பாளையம் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஆண் அலுவலருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மின் வாரிய அலுவலகம் நேற்று மூடப்பட்டு அங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை  பணிக்கு திரும்பிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படாததினால் பணியை புறக்கணித்து திரும்பிச்சென்றனர். மேலும், இவ்வலுவகத்தில் பணியாற்றும் 45 அலுவலர்களும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்யை பின்பற்றவேண்டும் என்றும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தவேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை பணியில் ஈடுபடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

 இதனால் மின் வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச்சென்றனர். இன்று மின் கட்டணம் கடைசி நாள் என்று வருபவர்கள் அபராத கட்டணத்தை தவிர்க்க அருகில் செயல்படும் தனியார் கனிணி மையத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தி மின் கட்டணம் செலுத்தினர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

   

Top