logo
பொது வேலை நிறுத்தம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 மையங்களில் மறியல், ஆர்ப்பாட்டம்

பொது வேலை நிறுத்தம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 மையங்களில் மறியல், ஆர்ப்பாட்டம்

26/Nov/2020 09:34:05

புதுக்கோட்டை: நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 12 மையங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்திருத்தங்கள், விவசாயிகளையும், வேளாண்மையையும் அடியோடு அழிக்கும் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசையும், துணைபோகும் மாநில அரசுகளையும் கண்டித்து நாடுதழுவிய அளவில் வியாழக்கிழமை  பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. வங்கிகள், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்குச் செல்லவில்லை. பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் மாவட்டத்தில் 12 மையங்களில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்hபட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கே.கணபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வி.சிங்கமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். தொமுச மாவட்டத் தலைவர் அ.ரெத்தினம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.ஜியாவுதீன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன் மற்றும் எம்.என்.ராமச்சந்தின், எம்.வேலுச்சாமி, டி.சன்தானம், ரெத்தினவேல் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட போராட்டத்தில் 126 பேரை போலீசார் கைது செய்தனர்.

அறந்தாங்கியில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் கே.தங்கராசு, தென்றல் கருப்பையா, கணேசன், சிதம்பரம் உள்ளிட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

கந்தர்வகோட்டையில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் உ.அரசப்பன், தொமுச சார்பில் பழனியப்பன், சிஐடியு சார்பில் கார்த்திக்கேயன், பன்னீர்செல்வம், இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீரனூரில் கே.தங்கவேல் தலைமையில் ராஜேந்திரன், சத்தியமூர்த்தி, எம்.சண்முகம், பாலதண்டாயுதபாணி, முருகவேல், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலங்குடியில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஆர்.பாலசுப்பி;ரமணியன் தலைமையில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு மற்றும் எல்.வடிவேல், தரணி முத்துக்குமார் உள்ளிட்டோரும், கறம்பக்குடியில் வி.வீரமுத்து தலைமையில் த.அன்பழகன், அரிபாஸ்கர், மாதவன், சாமியய்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பொன்னமராவதியில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் தீன் தலைமையில் என்.பக்ருதீன், குமார் உள்ளிட்டோரும், ஆவுடையார்கோவிலில் பழனிவேல் தலைமையில் சி.சுப்பிரமணியன்,  முருகேஷ் உள்ளிட்டோரும், அரிமளத்தில் ஆர்.வி.ராமையா தலைமையில் கரு.வெள்ளைச்சாமி, அ.மோகனசுந்தரம், அழகர், மாணிக்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 அன்னவாசலில் தேவராஜன் தலைமையில் எம்.ஆர்.சுப்பையா, எம்.ஜோஷி உள்ளிட்டோரும், மணமேல்குடியில் தங்கவேல் தலைமையில் கரு.ராமநாதன் உள்ளிட்டோரும், விராலிமலையில் திரவியராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. மேற்கண்ட சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Top