logo
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி பதவியேற்பு

04/Jan/2021 05:13:59

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி திங்கள்கிழமை (ஜன.4) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஓய்வுபெற்றார். இதனையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.

அதன்படி நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக திங்கள்கிழமை (ஜன.4) பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில்  நடைபெற்ற நிலழ்ச்சியில், நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிக்கு தலைமை தலைமை நீதிபதியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் கடந்த 1862-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாகவும், சுதந்திரத்துக்குப் பிறகு 31-ஆவது தலைமை நீதிபதியாகவும் சஞ்சீவ் பானர்ஜி பதவியேற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

இந்த பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், பேரவைத் தலைவர் தனபால், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான  சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Top