19/May/2020 02:40:05
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ரூ.4.50 கோடி மொய் வாங்கியவர் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது தோட்டத்தில் இருந்து 100 லி ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி கூட்டாம்புஞ்சையைச் சேர்ந்தவர் டி.கிருஷ்ணமூர்த்தி.கடந்த ஆண்டு மொய் விருந்து மூலம் இவருக்கு ரூ.4.50 கோடி மொய் வசூலானது. தனி நபருக்கு கிடைத்த அதிகபட்ச தொகை என்பதால் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், அவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவருவதாக கிடைத்த ரகசிய தகவலைத்தொடர்ந்து, அவரது தோட்டத்தில் வடகாடு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 லி ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதைத்தொடர்ந்து, சாராயம் காய்ச்சியதாக கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர் பி.செல்வம் ஆகியோர் மீது வடகாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.