logo
உயிரிழந்த கோவில்பட்டி ராணுவ வீரர் குடும்பத்துக்கு கடம்பூர் ராஜூ ரூ.5 லட்சம் உதவி

உயிரிழந்த கோவில்பட்டி ராணுவ வீரர் குடும்பத்துக்கு கடம்பூர் ராஜூ ரூ.5 லட்சம் உதவி

20/Nov/2020 06:42:53

கோவில்பட்டி:லடாக்கில் நடந்த விபத்தில் மரணம் அடைந்த கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தினரை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரு.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

கோவில்பட்டி அடுத்துள்ள தெற்கு திட்டங்குளத்தினை சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி(வயது 34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி தமயந்தி என்ற மனைவியும், கன்னிகா (7), வைஷ்ணவி (5), பிருதீப்ராஜ் (1) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறைக்காக அவர் ஊருக்கு வந்துள்ளார். பின்னர் மார்ச் மாதம் மீண்டும் ராணுவத்தில் பணிக்கு சென்றுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் அவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று அவரது இல்லத்திற்கு அவருடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு அவர், லடாக் பகுதியில் நடந்த விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி குடும்பத்தினர் அவர் பணிபுரிந்த இடத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டனர்.

வெடிபொருட்களை ஏற்றி சென்றபோது அப்போது, லடாக் பகுதியில் இருந்து வாகனத்தில் வெடி பொருட்களை ஏற்றி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் கருப்பசாமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த திட்டங்குளத்தில் ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தினரை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

கருப்பசாமியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது சொந்த நிதியிலிருந்து ரு.5 லட்சம்  நிதி உதவி வழங்கினார். கருப்பசாமி குழந்தைகளின் கல்விக்கும், அவரது மனைவி தமயந்தியின் வேலைவாய்ப்புக்கும் அரசுத் தரப்பில் முழு உதவி செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் மற்றும் பலர் உடன் சென்றனர்.


Top