logo
திருமண  விழாக்காலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருமண விழாக்காலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

19/Nov/2020 07:35:58

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பவானிசாகர், கொத்தமங்கலம், புதுவடவள்ளி, சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகைப்பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலத்தில் உள்ள விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயிக்கப்பட்டு கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் திருமண விசேஷங்கள் காரணமாகவும் பூக்களின் வரத்து குறைந்ததன் காரணமாகவும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 1260 -க்கும், முல்லை கிலோ ரூபாய் 770 -க்கும், காக்கடா கிலோ ரூபாய் 525 -க்கும், கிலோ ரூபாய் 59 -க்கும், ஜாதி முல்லை கிலோ ரூபாய் 600-க்கும், கனகாம்பரம் கிலோ ரூபாய் 600 -க்கும், சம்பங்கி கிலோ ரூபாய் 100 -க்கும் விற்பனையானது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Top